பெண்களையும், குழந்தைகளையும் மனிதக் கேடயங்களாக ஹமாஸ் பயன்படுத்துகிறது - ஆண்டனி பிளிங்கன்


பெண்களையும், குழந்தைகளையும் மனிதக் கேடயங்களாக ஹமாஸ் பயன்படுத்துகிறது - ஆண்டனி பிளிங்கன்
x

Image Courtacy: ANI

தினத்தந்தி 2 Nov 2023 9:34 PM GMT (Updated: 3 Nov 2023 6:04 AM GMT)

காசா பொதுமக்களுக்கு தீங்கு விளைவிப்பதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேலில் பிளிங்கன் விவாதிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

வாஷிங்டன்,

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இன்னும் இரு தினங்களில் ஒரு மாதத்தை எட்டவுள்ளது. ஆனால் அங்கு அமைதி திரும்புவதற்கான எந்த சூழலும் தென்படவில்லை. மாறாக நாளுக்கு நாள் போர் உக்கிரமடைந்து வருகிறது. அப்பாவி மக்கள் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் காசா வீதிகளில் உலாவுவது காண்போரின் நெஞ்சை நொறுக்குவதாக உள்ளது.

போரை நிறுத்தக்கோரும் ஐ.நா. மற்றும் அரபு நாடுகளின் அழைப்பை இஸ்ரேல் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அதோடு காசா மீது தரை, கடல், வான் என 3 வழிகளிலும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.

போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலுக்கு பக்கப்பலமாக இருந்து வரும் அமெரிக்கா, இஸ்ரேல் தன்னை தற்காத்து கொள்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளது. அதன்படி இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவது, படைகளை அனுப்புவது போன்ற உதவிகளை அமெரிக்கா செய்து வருகிறது. இதனால் போரை வழிநடத்துவதே அமெரிக்காதான் என ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் இன்று இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இஸ்ரேல் பயணத்தின்போது காசா பொதுமக்களுக்கு ஏற்படும் தீங்குகளை குறைக்க எடுக்கப்பட வேண்டிய "உறுதியான நடவடிக்கைகள்" பற்றி விவாதிக்க இருப்பதாக ஆண்டனி பிளிங்கன் கூறினார்.

ஒரு மாதத்திற்குள் தனது இரண்டாவது மத்திய கிழக்குப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிளிங்கன், "இஸ்ரேலுக்கு தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளவும், மீண்டும் நடக்காததை உறுதிசெய்யவும் முயற்சிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது. எந்த நாடும் தங்கள் குடிமக்களை படுகொலை செய்வதை பொறுத்துக்கொள்ளாது. நாங்கள் அதற்குப் பின்னால் நிற்கிறோம், ஆனால் ஜனநாயக நாடுகளாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பிடிபடும் பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது.

ஹமாஸ் இழிந்த, கொடூரமான மற்றும் வேண்டுமென்றே ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறது. ஹமாஸ் அவர்களின் போராளிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் மசூதிகளுக்கு அடியில் வைக்கிறது. இது நம்பமுடியாத அளவிற்கு சவாலானது, ஆனால் நாம் அந்த பொறுப்பை ஏற்க வேண்டும், மேலும் காசாவில் உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிப்பதைக் குறைக்க எடுக்கப்பட வேண்டிய உறுதியான நடவடிக்கைகளைப் பற்றி பேசுவோம், இதற்காக அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது.

ஹமாசால் கடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை விடுவிப்பது பயணத்தின் மற்றொரு தலைப்பாக இருக்கும் என்று ஆண்டனி பிளிங்கன் கூறினார்.


Next Story