இத்தாலியை மிரட்டும் வெப்ப அலை - தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் சுற்றுலா பயணிகள்


இத்தாலியை மிரட்டும் வெப்ப அலை - தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 20 July 2023 4:57 PM GMT (Updated: 20 July 2023 4:57 PM GMT)

வெயிலின் தாக்கத்தால் ரோம் நகரில் தண்ணீர் தேவை அதிகரித்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

ரோம்,

புவி வெப்பமயமாதல் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் உலகின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக சில நாடுகளில் அதீத மழைப்பொழிவும், சில நாடுகளில் கடுமையான வறட்சியும் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் தற்போது வரலாறு காணாத வெப்ப அலை வீசி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், பிரான்ஸ், ஜெர்மனி, போலாந்து உள்ளிட்ட நாடுகளில் அடுத்த வாரம் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இத்தாலியின் 16 நகரங்களில் கடுமையான வெப்பம் காரணமாக அண்மையில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டது. அங்கு பகல் 11 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதை முடிந்தவரை தவிர்க்குமாறும், முதியவர்கள் மற்றும் நோய் பாதிப்புகள் உள்ளவர்களை அதிக கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இத்தாலியில் தற்போது 46 டிகிரி வெயில் வாட்டி எடுத்து வருவதால் அங்கு அதீத வெப்ப அலை வீசுகிறது. தலைநகர் ரோமில் வீசி வரும் அனல் காற்று காரணமாக அந்நாட்டு மக்களும், சுற்றுலா பயணிகளும் பெரும் அவஸ்தைக்கு ஆளாகியுள்ளனர். சுற்றுலா பயணிகள் கையில் குடையுனும், தலையில் தொப்பியுடனும் சுற்றி வருகின்றனர்.

வெயிலின் தாக்கத்தால் அங்கு தண்ணீர் தேவை அதிகரித்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதன் விளைவாக ரோம் நகரில் குடிநீர் கேன்களின் விலை அதிகரித்துள்ளது. அந்நகரில் அமைக்கப்பட்டுள்ள பொது குடிநீர் குழாய்களில் பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து தண்ணீரை பிடித்துச் செல்கின்றனர்.



Next Story