ஹிஜாப் போராட்டம்: ஈரானில் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு


ஹிஜாப் போராட்டம்: ஈரானில் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
x

ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டம் ஈரானில் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டம் மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது.

ரோம்,

இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் நாடு ஈரான். இந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தலை மற்றும் முகத்தை மூடும் வகையிலான உடையான ஹிஜாப் அணிவது 1979-ம் ஆண்டு முதல் ஈரானில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்து கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த மாஷா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் அவர் கடந்த 17-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஹிஜாப் சரியாக அணியாததால் போலீசார் தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற இளம்பெண் மாஷா அமினி உயிரிழந்த சம்பவம் பெரும் ஈரானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மாஷா மாரடைப்பு காரணமாக தான் உயிரிழந்ததாக ஈரான் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மாஷா அமினிக்கு ஆதரவாக ஈரானின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 18-ம் தேதி முதல் ஹிஜாப்பிற்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக பெண்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக துருக்கியில் இஸ்லாமிய பெண்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல், கனடாவிலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டம் ஈரானில் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டம் மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது.

இந்நிலையில், ஈரானில் ஹிஜாப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த அங்குள்ள சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் சேவைகள் ஈரானில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக அங்கு நிகழும் போராட்டங்களை பகிர முடியாத நிலையில் சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. மேலும் சில மொபைல்போன்கள் நெட்வொர்க்குகள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story