பாகிஸ்தானில் வெள்ள நிவாரண முகாமில் இருந்து இந்துக்கள் வெளியேற்றம்; வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் கைது


பாகிஸ்தானில் வெள்ள நிவாரண முகாமில் இருந்து இந்துக்கள் வெளியேற்றம்; வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் கைது
x

பாகிஸ்தானில் வெள்ள நிவாரண முகாமில் இருந்து இந்து சமூகத்தினரை துரத்தி அடித்த வீடியோவை எடுத்த பத்திரிகையாளரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.லாகூர்,


பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புக்கு 80 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. 1,200 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். வெள்ளத்தின் விளைவாக வீடுகள், உடைமைகள் உள்ளிட்டவற்றை இழந்த பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 3.3 கோடி பேர் வெள்ளத்திற்கு பாதிப்படைந்து உள்ளனர்.

எனினும், பல பகுதிகளில் நிவாரண உதவிகள் கிடைக்காமல் மக்கள் அல்லாடும் நிலை காணப்படுகிறது. சமீபத்தில் 6 வயது சிறுமி ரசியா உணவு, மருந்து கிடைக்காமல் உயிரிழந்த அவலமும் வெளிவந்தது. இதனை தொடர்ந்து அவரது தந்தை உள்பட நிவாரண உதவி கேட்டு 200 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதோடு அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.

இதுபோன்று, வெளியுலகுக்கு தெரியாமல் பல இன்னல்களை வெள்ளம் பாதித்த மக்கள் அனுபவித்து வருகின்றனர். வெள்ள பாதிப்புகளில் சீரழிந்து போயுள்ள அந்நாட்டில், சிந்த் மாகாணத்தில், உணவு தேடி சென்ற ஒரு சிறுமியை, கும்பல் ஒன்று கடத்தி சென்று, அறையில் பல நாட்கள் வரை அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடுமையும் நடந்து உள்ளது. இதுபோன்று பல பலாத்கார சம்பவங்கள் சமீப காலங்களாக நடந்து வருகின்றன.

சராசரியாக நாள் ஒன்றுக்கு பாகிஸ்தானில் 10 குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு இரையாகின்றனர் என தி சிங்கப்பூர் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், இந்து பாக்ரி சமூக மக்களுக்கு நிவாரண பொருட்கள் எதுவும் கிடைக்க விடாமல் உள்ளூர் அதிகாரிகள் தடுத்ததுடன், அவர்களை துரத்தி விட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியானது.

இந்த வீடியோவை எடுத்த நிருபர் நஸ்ரல்லா கடானி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை 5 நாட்கள் விசாரணை காவலுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அந்த வீடியோவில், சிந்த் மாகாணத்தின் மீர்ப்பூர் மதெல்லா என்ற இடத்தில் வசித்து வரும் பாக்ரி சமூகத்தினர், இந்துக்கள் என்பதற்காக நிவாரண முகாம்களில் இருந்து உள்ளூர் நிர்வாகம் அவர்களை வெளியேற்றி உள்ளது என நிருபர் தெரிவித்து உள்ளார்.

நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்புடனும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகின்றனர் என அரசு கூறி வரும் நிலையில், அரசு அதிகாரிகளின் அடாவடித்தனம் அந்த வீடியோவில் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.

வெள்ளம் பாதித்தோர் அழுது கொண்டு தங்களது நிலைமையை விவரிக்கின்றனர். அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு மற்றும் உறைவிடம் ஆகியவற்றை கூட இயற்கை பேரிடரில் எல்லாவற்றையும் இழந்த எங்களுக்கு தர மறுக்கின்றனர் என அவர்கள் வீடியோவில் கூறுகின்றனர்.

எங்களை இந்துக்கள் என்பதற்காக நிவாரண முகாம்களில் இருந்து வெளியேற்றி விட்டனர். நாங்கள் வெள்ளம் பாதித்தவர்கள் இல்லை என அவர்கள் கூறுகின்றனர். நாங்கள் எங்கு செல்ல? எங்கள் குழந்தைகளை எப்படி காப்பது? ஏழைகளான எங்களது வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டன. உணவு, நீர் இன்றி நாங்கள் எப்படி உயிர் வாழ்வோம்? என அவர்கள் வீடியோவில் கூறும் காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

சமீபத்தில், வெள்ளம் பாதித்த மக்களுக்காக பலூசிஸ்தானில் இந்து சமூகத்தினர் மனிதநேய அடிப்படையில், தங்களது கோவில் கதவுகளை நல்லெண்ணத்துடன் திறந்து விட்டனர் என்று செய்தி வெளியான நிலையில், இதுபோன்ற அவலங்களும் நடந்து வருகின்றன.


Next Story