செங்கடலில் அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்


செங்கடலில் அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்
x

அமெரிக்காவைச் சேர்ந்த ‘பினோச்சியோ’ என்ற கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஏடன்,

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 5 மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவில்லை என்றால் செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேலுடன் தொடர்புடைய அனைத்து சரக்கு கப்பல்களையும் தாக்குவோம் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர்.

அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதி வழியாக பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதே சமயம் அமெரிக்கா தலைமையில் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் கூட்டுப்படை உருவாக்கப்பட்டு, ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அவ்வப்போது வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் செங்கடல் வழியாக சென்றுகொண்டிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த 'பினோச்சியோ' என்ற கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் மிக நேர்த்தியாக நடைபெற்றது என அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீயா தெரிவித்துள்ளார். மேலும் காசாவில் உள்ள பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ரமலான் மாதத்தின்போது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story