டுவிட்டரில் நாள் ஒன்றுக்கு யாரெல்லாம் எத்தனை பதிவுகளை படிக்கலாம்..? எலான் மஸ்க் அறிவிப்பு


டுவிட்டரில் நாள் ஒன்றுக்கு யாரெல்லாம் எத்தனை பதிவுகளை படிக்கலாம்..? எலான் மஸ்க் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 July 2023 6:14 PM GMT (Updated: 1 July 2023 6:15 PM GMT)

டுவிட்டரில் கணக்கு வைத்திருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு எத்தனை பதிவுகளை படிக்கலாம்..? என்ற விவரங்களை எலான் மஸ்க் அறிவித்து உள்ளார்.

நியூயார்க்,

உலக பணக்காரர்களில் முன்னணியில் இருப்பவர் மற்றும் டெஸ்லா உரிமையாளரான எலான் மஸ்க், கடந்த ஆண்டு அக்டோபரில் டுவிட்டரின் உரிமையாளரானார். அவரது வசம் டுவிட்டர் சென்ற பின்னர் பல முடிவுகள் அதிரடியாக எடுக்கப்பட்டன.

இதன்படி, சரிபார்க்கப்பட்ட மொபைல் எண்களை கொண்ட சந்தாதாரர்களுக்கு புளூ டிக் அடையாளம் அவரது முகப்பு பக்கத்தில் கிடைக்க பெறும். புளூ டிக் சந்தாதாரர் ஆகும் வசதியை கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம். இதற்கான வசதிகளை பயனாளர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் அளித்து உள்ளது. டுவிட்டர் புளூ வசதி பெற டுவிட்டர் கணக்கு தொடங்கி 90 நாட்கள் ஆகியிருக்க வேண்டும்.

புளூ டிக் முகப்பு பக்கம் பெற்ற பயனாளர்களுக்கு, கூடுதல் அம்சங்களாக சில வாக்குறுதிகளை டுவிட்டர் நிறுவனம் அளித்தது. குறைவான விளம்பரங்கள் (50% அளவு), நீண்ட பதிவுகள், அதிக நேரம் கொண்ட வீடியோக்கள், வரவிருக்கிற புதிய அம்சங்களை விரைவாக பெற்று கொள்வது ஆகியவை உறுதியளிக்கப்பட்டன.

வீடியோக்கள் முழு அளவில் எச்.டி. துல்லியத்துடன் பகிர முடியும். பதிவை வெளியிட்ட 30 நிமிடங்களில் 5 முறை எடிட் செய்யும் வசதியும் புளூ டிக் பயனாளர்களுக்கு வழங்கப்படும். பயனாளர் ரத்து செய்யும்வரை, விதிகளுக்கு உட்பட்டு தானாகவே புதுப்பித்து கொள்ளும் வசதியும் கொண்டது. இதேபோன்று, ஸ்பாம் உள்ளிட்ட வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் டுவிட் பதிவுகளில், இந்த பயனாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் போன்ற விசயங்கள் வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டன.

இந்த நிலையில், டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தீவிர அளவில் தேவையற்ற தரவுகளை ஒழிப்பது மற்றும் டுவிட்டரை கையாளுவது ஆகியவற்றுக்காக நாங்கள் தற்காலிக வரம்புகளை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

இதன்படி, சரிபார்க்கப்பட்ட கணக்குகள் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பதிவுகளை படிக்க முடியும். சரிபார்க்கப்படாத கணக்குகளை கொண்டவர்கள் ஒரு நாளைக்கு 600 பதிவுகளையும் மற்றும் புதிய சரிபார்க்கப்படாத கணக்குகளை கொண்டவர்கள் ஒரு நாளைக்கு 300 பதிவுகளையும் படிக்க முடியும் என அறிவித்து உள்ளார்.


Next Story