குழந்தைகளின் மரணத்தில் லாபம் தேடும் நபர்களுக்கு இரக்கம் காட்டமாட்டேன்: எலான் மஸ்க்


குழந்தைகளின் மரணத்தில் லாபம் தேடும் நபர்களுக்கு இரக்கம் காட்டமாட்டேன்:  எலான் மஸ்க்
x
தினத்தந்தி 21 Nov 2022 9:40 AM GMT (Updated: 21 Nov 2022 9:47 AM GMT)

குழந்தைகளின் மரணத்தில் லாபம், புகழ் அடைய அல்லது அரசியல் செய்ய முயற்சிக்கும் நபர்களுக்கு நான் இரக்கம் காட்டமாட்டேன் என எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.



வாஷிங்டன்,


அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசினார் என்பதற்காக அவரது டுவிட்டர் கணக்கு கடந்த 2020-ம் ஆண்டு முடக்கப்பட்டது. தற்போது டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கியிருக்கும் நிலையில் டிரம்பிற்கு மீண்டும் அவரது டுவிட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுமா? என்பது குறித்த விவாதங்கள் அதிகரித்தன.

இதனையடுத்து, டொனால்டு டிரம்பை டுவிட்டரில் மீண்டும் சேர்க்கலாமா என்பது குறித்து எலான் மஸ்க் டுவிட்டரில் வாக்கெடுப்பை நடத்தினார். இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலானவர்கள் டிரம்பை சேர்க்கலாம் என்றே பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில், எலான் மஸ்க் நடத்திய வாக்கெடுப்பில் டொனால்டு டிரம்பை சேர்க்க 51.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து, டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கின் தடையை எலான் மஸ்க் நீக்கினார். இதனால் 22 மாதங்களுக்கு பிறகு டிரம்பின் கணக்கு டுவிட்டரில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், அமெரிக்காவை சேர்ந்த வலது சாரி கொள்கைகளில் தீவிர ஆர்வமுடைய கோட்பாட்டாளரான அலெக்ஸ் ஜோன்ஸ் என்பவரையும் டுவிட்டரில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அலெக்சையும் மீண்டும் டுவிட்டரில் சேர்க்க வேண்டும். இல்லையெனில் ஏன்? என்று தெரிவிக்க வேண்டும் என பயனாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு டுவிட்டரிலேயே அவருக்கு எலான் மஸ்க் பதிலளித்து உள்ளார். அதில், அவரது முதல் குழந்தை அவரது கைகளிலேயே உயிரிழந்தது என தெரிவித்து உள்ளார். அவனின் கடைசி இதய துடிப்பை உணர்ந்தேன்.

குழந்தைகளின் மரணத்தில் லாபம், புகழ் அடைய அல்லது அரசியல் செய்ய முயற்சிக்கும் நபர்களுக்கு நான் இரக்கம் காட்டமாட்டேன் என எலான் மஸ்க் அதில் தெரிவித்து உள்ளார். மஸ்க்கின் முதல் மகன் நிவாடா அலெக்சாண்டர் ஆவார்.

கடந்த 2018-ம் ஆண்டு டெஸ்லா கார் விபத்தில் டீன்-ஏஜ் வயதுடைய ஒருவர் உயிரிழந்தபோது, அவரது தந்தைக்கு இ-மெயில் வழியே மஸ்க் ஆறுதல் கூறினார்.

அந்த செய்தியில், ஒரு குழந்தையை இழப்பதனை விட மோசம் வாய்ந்தது ஒன்றுமில்லை என பிறந்து 10 வாரமே ஆன மகன் நிவாடா அலெக்சாண்டரின் மறைவை மஸ்க் குறிப்பிட்டார்.

சாண்டி ஹூக் பகுதியில் குழந்தைகள் உள்பட 8 பேர் மற்றும் எப்.பி.ஐ. அதிகாரி ஒருவர் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவம் புரளி என்று அலெக்ஸ் ஜோன்ஸ் கூறியிருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது.

இதுபோன்று, புரளி என பொய்யான செய்தியை பரப்பியதற்காக பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு மொத்தம் ரூ.7 ஆயிரத்து 893 கோடி இழப்பீடாக அலெக்ஸ் கொடுக்க வேண்டும் என நீதிபதி ஒருவர் கடந்த அக்டோபர் 12-ந்தேதி வெளியிட்ட உத்தரவில் கூறினார்.



Next Story