பாகிஸ்தானில் மேலும் ஒரு வழக்கில் இம்ரான் கான் கைது


பாகிஸ்தானில் மேலும் ஒரு வழக்கில் இம்ரான் கான் கைது
x

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த வன்முறை மற்றும் ராணுவ தலைமையகம் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவராக உள்ளார். 2018 முதல் ஏப்ரல் 2022, வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தார். இம்ரான்கான் தன்னுடைய பதவி காலத்தில் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்று சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் கோர்ட்டு கடந்த ஆண்டுஆகஸ்டு மாதம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு இம்ரான்கானுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. ஆனால் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக கூறி தொடரப்பட்ட 'சிபர்' வழக்கில் இம்ரான் கைது செய்யப்பட்டு அட்டோக் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அடியாலா சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு கடந்த மாத இறுதியில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அவரை விடுதலை செய்வதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது. எனினும் வேறு சில வழக்குகளில் கைது செய்யப்பட்டதால் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், மே 9ம் தேதி நடந்த வன்முறை மற்றும் ராணுவ தலைமையகம் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கில் இம்ரான் கான் இன்று கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்தது.

இம்ரான் மீதான வழக்கு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, பாதுகாப்பு கருதி காணொலி வாயிலாக இம்ரான் கான் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி காவல்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். அத்துடன், சிறைக்கு சென்று இம்ரான் கானிடம் விசாரணை நடத்தலாம் என அனுமதி அளித்தார்.

1 More update

Next Story