இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான திருமணம்: இம்ரான் கான்-அவரது மனைவிக்கு 7 ஆண்டுகள் சிறை


இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான திருமணம்: இம்ரான் கான்-அவரது மனைவிக்கு 7 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 3 Feb 2024 11:39 AM GMT (Updated: 3 Feb 2024 12:17 PM GMT)

திருமணத்திற்கு முன் சட்டவிரோதமான உறவில் இருப்பது, கல்லால் அடித்து கொல்லப்படும் மரண தண்டனைக்குரிய குற்றம் என்று மனுதாரர் குற்றம்சாட்டியிருந்தார்.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்குகளின் விசாரணை முடிந்து அவ்வப்போது தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான திருமண வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த வழக்கை புஷ்ரா பீவியின் முதல் கணவர் கவார் மனேகா தொடர்ந்திருந்தார். வழக்கு மனுவில், மறுமணத்திற்கான கட்டாய காத்திருப்பு காலம் என்ற இஸ்லாமிய நடைமுறையை (இத்தாத்) மீறியதாக கூறியிருந்தார். திருமணத்திற்கு முன் சட்டவிரோதமான உறவில் இருப்பது, கல்லால் அடித்து கொல்லப்படும் மரண தண்டனைக்குரிய குற்றம் என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

அடியாலா சிறையில் நேற்று நடைபெற்ற இறுதிக்கட்ட விசாரணை சுமார் 14 மணி நேரம் நீடித்தது. விசாரணையின் முடிவில், இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி இருவரும் இஸ்லாமிய நடைமுறையை மீறி திருமணம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


Next Story