அயோத்தி ராமர் கோவில் திறப்பு இந்தியாவில் பெருகிவரும் பெரும்பான்மைவாதத்தை காட்டுகிறது - பாகிஸ்தான்


அயோத்தி ராமர் கோவில் திறப்பு இந்தியாவில் பெருகிவரும் பெரும்பான்மைவாதத்தை காட்டுகிறது - பாகிஸ்தான்
x

சிறுபான்மையினரின் பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

இஸ்லாமாபாத்,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

அயோத்தி ராமர் கோவில் கருவறை பால ராமர் பிரதிஷ்டைக்குப் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.

இந்த நிலையில் அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் திறப்பு விழா இந்தியாவில் பெருகி வரும் பெரும்பான்மைவாதத்தை சுட்டிக்காட்டுவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

இன்றைய கும்பாபிஷேக விழாவிற்கு வழிவகுத்த கடந்த 31 ஆண்டுகால வளர்ச்சிகள், இந்தியாவில் பெருகிவரும் பெரும்பான்மைவாதத்தை சுட்டிக்காட்டுகின்றன. இந்திய முஸ்லீம்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஓரங்கட்டலுக்கான தற்போதைய முயற்சிகளின் முக்கிய அம்சமாக இவை அமைகின்றன.

இந்தியாவில் அதிகரித்து வரும் 'இந்துத்துவா' சித்தாந்தத்தின் அலையானது மத நல்லிணக்கத்திற்கும் பிராந்திய அமைதிக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் புனித இடங்கள் உட்பட சிறுபான்மையினரின் பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளது.


Next Story