பிஜி நாட்டின் சுகாதாரம், கல்வி உள்பட பல்வேறு தேச கட்டமைப்பு பணிகளில் இந்தியா... மத்திய மந்திரி ஜெய்சங்கர்


பிஜி நாட்டின் சுகாதாரம், கல்வி உள்பட பல்வேறு தேச கட்டமைப்பு பணிகளில் இந்தியா... மத்திய மந்திரி ஜெய்சங்கர்
x

பிஜி நாட்டின் சுகாதாரம், கல்வி, வேளாண்மை உள்பட பல்வேறு தேச கட்டமைப்பு பணிகளில் இந்தியா நல்லுறவுடன் செயல்படுகிறது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.



சுவா,


இந்தோ-பசிபிக் பகுதிகளில் ஒன்றான பிஜி நாட்டுக்கு மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவருக்கு அந்நாட்டு கலாசாரம் மற்றும் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்த பயணத்தில் பிஜியின் துணை பிரதமர் பீமன் பிரசாத் உடன் நேற்று நடந்த சந்திப்பில், இரு நாடுகளின் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என மந்தரி ஜெய்சங்கர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, நடி நகரில் நடந்த 12-வது விஷ்வ இந்தி கூட்டமைப்பு நிகழ்ச்சியை மத்திய மந்திரி தொடங்கி வைத்து பேசினார். இந்தியா மற்றும் பிஜி இடையே வரலாற்று நட்புறவு உள்ளது என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் பிஜி அதிபர் ராத்து விலியம் மைவாலிலி கதோனிவரே கலந்து கொண்டார். 12-வது உலக இந்தி மாநாடு 15-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரை (நாளை) நடைபெறுகிறது.

நடி நகரில் மத்திய மந்திரி ஜெய்சங்கர், ஸ்ரீசிவ சுப்ரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். இதன்பின் சுவா நகரில் மத்திய மந்திரி செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, நமது இரு நாடுகளிடையே சிறந்த முறையில் பயணம் மேற்கொள்ளும் வகையில் விசா தள்ளுபடி தொடர்புடைய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளேன்.

இரு நாடுகள் இடையே நெருங்கிய மற்றும் நீண்டகால நட்புறவுகள் உள்ளன. அவை நமது மக்களுடன் தொடர்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டவை.

பிஜி நாட்டின் சுகாதாரம், கல்வி, வேளாண்மை போன்ற திறன் கட்டமைப்பு பணிகளில் அந்நாட்டுடன் பல்வேறு பிரிவுகளிலும் இணைந்து பணியாற்றி தேச கட்டமைப்பு முயற்சிகளில் ஈடுபட இந்தியாவுக்கு நல்வாய்ப்பு கிடைக்க பெற்று உள்ளது.

கரும்பாலை திட்டங்களில் நாங்கள் பணியாற்றி இருக்கிறோம். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் ஒன்றாக பணியாற்றி உள்ளோம். நடுத்தர மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆதரவை வழங்குவது போன்ற துறைகளில் எங்களது இன்றைய ஆலோசனையின் ஒரு பகுதி இருந்தது என நான் நினைக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story