ஆப்கானிஸ்தானுக்கு 32 டன் மருத்துவ உதவிப் பொருட்களை அனுப்பியது இந்தியா


ஆப்கானிஸ்தானுக்கு 32 டன் மருத்துவ உதவிப் பொருட்களை அனுப்பியது இந்தியா
x

Image Courtesy : @MEAIndia twitter

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு கோதுமை மற்றும் மருத்துவ உதவிப் பொருட்களை மனிதாபிமான அடிப்படையில் இந்தியா அனுப்பி வருகிறது.

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு உணவு தட்டுப்பாடு, வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை அந்நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர்.

தலிபான் அரசை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்காத நிலையில், அந்நாட்டு மக்களுக்காக மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் மட்டும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆப்கான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் இந்திய அரசு மருத்துவ உதவிப் பொருட்கள், கோதுமை ஆகியவற்றை அனுப்பி வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை 9 கட்டமாக மருந்துப் பொருட்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு 10-வது கட்டமாக மருந்து உதவிப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆப்கானிஸ்தான் மக்களுடன் எங்களது சிறப்பான கூட்டாண்மை தொடர்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 10-வது கட்டமாக கப்பலில் அனுப்பிய மருத்துவ உதவிப் பொருட்கள் காபூலில் உள்ள இந்திராகாந்தி மருத்துவமனையில் இன்று ஒப்படைக்கப்பட்டு உள்ளன. ஆப்கானிஸ்தானுக்கு இதுவரை 32 டன் மருந்து பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story