பொருளாதார வளர்ச்சியில் வலுவுடன் தொடர்ந்து நீடிக்கும் இந்தியா: ஐ.நா. பொருளாதார நிபுணர் கணிப்பு


பொருளாதார வளர்ச்சியில் வலுவுடன் தொடர்ந்து நீடிக்கும் இந்தியா: ஐ.நா. பொருளாதார நிபுணர் கணிப்பு
x

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா வலுவுடன் தொடர்ந்து நீடிக்கும் என அதற்கான 3 காரணிகளை குறிப்பிட்டு, ஐ.நா. பொருளாதார நிபுணர் கணிப்பு வெளியிட்டு உள்ளார்.



நியூயார்க்,


ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான துறையின் பொருளாதார பகுப்பாய்வு மற்றும் கொள்கை பிரிவின் சர்வதேச பொருளாதார கண்காணிப்பு கிளையின் தலைவராக இருந்து வருபவர் ரஷீத்.

உலக பொருளாதார சூழல் மற்றும் பலன்கள் 2023 அறிக்கையை அவர் வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது, தெற்கு ஆசிய நாடுகளில் அதுவும் ஜி-20 உறுப்பு நாடுகளில், வளர்ச்சிக்கான பலன்களை அடைவது சவாலாக உள்ளபோதிலும், இந்திய பொருளாதார வளர்ச்சியானது தொடர்ந்து வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக பொருளாதாரத்தில் இந்தியா ஒரு பிரகாசம் நிறைந்த நாடாக தற்போது உள்ளது என கூறியுள்ளார். நடப்பு ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (ஜி.டி.பி.) 5.8 அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி ரஷீத் பேசும்போது, உலகின் மிக விரைவான வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் ஒன்றான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வரும் 2024-ம் ஆண்டில் 6.7 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்று கூறினார்.

இது இந்தியாவின் நீடித்த வளர்ச்சி விகிதம் ஆகும். இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவிலான வறுமையில் வாடும் மக்கள் உள்ளனர். அதனால், இந்த வளர்ச்சி விகிதம் இந்தியாவை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

ரஷீத் கூறும்போது, வளர்ச்சி விகிதம் நீடிக்கும்போது, நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு ஏற்ற ஒன்றாக இருக்கும். சர்வதேச அளவில் வறுமை ஒழிப்புக்கும் சிறந்த ஒன்றாக இருக்கும் என குறிப்பிட்டு உள்ளார்.

இவற்றில், இந்தியாவின் வளர்ச்சி விகிதங்களுக்கு 3 காரணிகளை அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதன்படி, இந்தியாவின் வேலை வாய்ப்பின்மை விகிதம் குறைந்து உள்ளது. 4 ஆண்டுகளில் 6.4 சதவீதம் அளவாக அது குறைந்து உள்ளது என கூறியுள்ளார்.

அடுத்தது, இந்தியாவின் பணவீக்க நெருக்கடியும் குறைந்து உள்ளது. அது, நடப்பு ஆண்டில் 5.5 சதவீதம் மற்றும் 2014-ம் ஆண்டில் 5 சதவீதம் ஆகவும் இருக்கும்.

3-வது முந்தின ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இறக்குமதி சார்ந்த செலவுகள் இந்தியாவில் குறைந்து உள்ளன. அவற்றில் எரிபொருள் இறக்குமதி குறைந்து உள்ளது. இந்த 3 காரணிகளும், கடந்த இரு ஆண்டுகளாக இந்தியா வளர்ச்சி அடைய உதவி உள்ளது என அவர் குறிப்பிட்டு உள்ளார்.


Next Story