மாலத்தீவுக்கு இந்திய தொழில்நுட்ப குழு வருகை... ராணுவ வீரர்களை வெளியேற்றும் நடைமுறை தொடங்கியது


மாலத்தீவுக்கு இந்திய தொழில்நுட்ப குழு வருகை... ராணுவ வீரர்களை வெளியேற்றும் நடைமுறை தொடங்கியது
x
கோப்பு படம்

ராணுவ நடவடிக்கைகளில் நேரடி தொடர்பு இல்லாத இந்திய தொழில்நுட்பக் குழுவை விமான தளங்களில் நியமிக்க மாலத்தீவு தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மாலத்தீவில் உள்ள மூன்று விமான தளங்களை இந்திய ராணுவம் நிர்வகித்து வந்தது. அங்கு இந்திய ராணுவ வீரர்கள் 88 பேர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். அவர்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு டோர்னியர் விமானத்தைப் பயன்படுத்தி, கடந்த சில ஆண்டுகளாக மாலத்தீவு மக்களுக்கு மனிதாபிமான மற்றும் மருத்துவ தேவைகளுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்கிவந்தனர்.

இந்நிலையில், மாலத்தீவு அதிபராக கடந்த ஆண்டு முகமது முய்சு பதவியேற்றதில் இருந்து மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவில் பதற்றம் உருவானது. அதாவது, பதவியேற்றபின் பேசிய முய்சு, மாலத்தீவில் உள்ள இந்திய படைகளை 2024-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதிக்குள் திரும்பப் பெறுமாறு இந்தியாவிடம் முறைப்படி கோரிக்கை வைத்தார்.

இதுதொடர்பாக இரு தரப்பிலும் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பின்னர் நாடாளுமன்றத்தில் பேசிய முய்சு, ஒரு விமான தளத்தில் இருந்து இந்திய துருப்புகள் 2024 மார்ச் 10ம் தேதிக்குள் திருப்பி அனுப்பப்படும் என்றும், மீதமுள்ள இரண்டு விமான தளங்களில் இருக்கும் துருப்புகள் 2024 மே 10ம் தேதிக்குள் அனுப்பப்படும் என்றும் அறிவித்தார்.

தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், இந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக, ராணுவ நடவடிக்கைகளில் நேரடி தொடர்பு இல்லாத இந்திய தொழில்நுட்பக் குழுவை நியமிக்க மாலத்தீவு தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி ஒரு விமான தளத்தில் உள்ள வீரர்களுக்கு பதிலாக பணியாற்றக்கூடிய இந்திய தொழில்நுட்ப குழு நேற்று இரவு மாலத்தீவு வந்தடைந்தது. அவர்கள் விமான தளத்தின் பொறுப்பை ஏற்றதும் அந்த தளத்தில் உள்ள இந்திய வீரர்கள் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமானத்தை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் இந்திய குழு மாலத்தீவுக்கு வந்துள்ளதாகவும், நேற்று இரவு அட்டு பகுதிக்கு வந்து பணி தொடர்பான செயல்முறையை நிறைவு செய்ததாகவும் மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சக தகவலை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி உள்ளது.


Next Story