அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்ம மரணம் - நடப்பு ஆண்டில் 4வது சம்பவம்


அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்ம மரணம் - நடப்பு ஆண்டில் 4வது சம்பவம்
x
தினத்தந்தி 2 Feb 2024 5:14 AM GMT (Updated: 2 Feb 2024 5:25 AM GMT)

நடப்பு ஆண்டில் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் இதுவரை 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம் சின்சினதி நகரில் பிரபல பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த ஷ்ரேயாஸ் ரெட்டி பினிகர் என்பவர் கல்வி பயின்று வந்தார்.

இந்நிலையில், மாணவர் ஷ்ரேயாஸ் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷ்ரேயாஸ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா? உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, அமெரிக்காவில் நடப்பு ஆண்டில் இதுவரை இந்திய மாணவர்கள் 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் இண்டியானா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுவந்த இந்திய மாணவரான நீல் ஆச்சாரியா கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அதேபோல், ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுவந்த இந்திய மாணவர் விவேக் சைனி (25) கடந்த மாதம் 16ம் தேதி சுத்தியலால் அடித்துக்கொல்லப்பட்டார். போதைபழக்கத்திற்கு அடிமையான ஆதரவற்ற நபரான ஜூலியன் என்பவர் விவேக்கை அடித்துக்கொலை செய்தார்.

அதேபோல், இலினொய் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுவந்த இந்திய மாணவர் அகுல் தவான் (வயது 18) கடந்த மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் பல்கலைக்கழகத்திற்கு வெளியே பிணமாக மீட்கப்பட்டார். இதன் மூலம் நடப்பு ஆண்டில் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இந்திய மாணவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story