இந்தோ-பசிபிக் ஸ்திரதன்மை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்: பென்டகனில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு


இந்தோ-பசிபிக் ஸ்திரதன்மை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்:  பென்டகனில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு
x
தினத்தந்தி 27 Sep 2022 1:08 AM GMT (Updated: 27 Sep 2022 4:52 AM GMT)

சர்வதேச சூழ்நிலை மிகவும் சவாலாக உள்ள நிலையில், இந்தோ-பசிபிக்கின் ஸ்திரதன்மை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என பென்டகனில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.

வாஷிங்டன்,


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பொது சபையின் உயர்மட்ட கூட்டத்தில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். கடந்த சனிக்கிழமை இந்த கூட்டம் நிறைவடைந்த நிலையில், அடுத்த 3 நாட்கள் அவர் வாஷிங்டனில் செலவிடுகிறார்.

இதில், அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன் மற்றும் அதிபர் பைடன் நிர்வாகத்தில் உள்ள பிற முக்கிய உயரதிகாரிகளை ஜெய்சங்கர் சந்தித்து பேச இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, பென்டகனில் அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாய்டு ஆஸ்டினை, மத்திய மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பென்டகனில் தொடக்க உரையில் பேசும்போது, பல்வேறு காரணங்களுக்காக சர்வதேச சூழ்நிலை மிகவும் சவாலாக உள்ள நிலையில், இந்தோ-பசிபிக்கின் ஸ்திர தன்மை, பாதுகாப்பு மற்றும் வளம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்.

அதனை மற்றவர்கள் சிறந்த முறையில் செய்துள்ளனர் என்று கூறியுள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வலிமையான பாதுகாப்பு தொழில் கூட்டமைப்பு மற்றும் ராணுவ பயிற்சிகள் உருவாக்கப்படுவதன் அவசியம் பற்றியும் இந்த பேச்சுவார்த்தையின்போது, மத்திய மந்திரி உறுதி செய்துள்ளார்.

இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு பற்றி பென்டகனின் ஊடக செயலாளரான பேட் ரைடர் வெளியிட்ட செய்தியில், அமெரிக்க மற்றும் இந்திய ராணுவத்தினர் இடையே ஆழ்ந்த செயல்பாடு சார்ந்த ஒருங்கிணைப்புக்காக, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றங்களை விரிவுபடுத்துதல் மற்றும் தளவாட பிரிவில் ஒத்துழைப்புடன் செயல்படுவது உள்ளிட்டவற்றுக்கு இரு தலைவர்களும் ஒப்புதல் அளித்தனர் என்று அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

இரு நாடுகளும் விண்வெளி, சைபர், செயற்கை தொழில்நுட்பம் மற்றும் பிற தளங்களில் நெருங்கி பணியாற்றி வரும் நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் புதிய பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட இரு தரப்பினரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து உள்ளனர் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.


Next Story