போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் பரவும் தொற்று நோய் - ஐ.நா வெளியிட்ட பகீர் தகவல்


போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் பரவும் தொற்று நோய் - ஐ.நா வெளியிட்ட பகீர் தகவல்
x

போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் தொற்று நோய் பரவி வருவதாக பாலஸ்தீன விவகாரங்களுக்கான ஐ.நா நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

காசா,

இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த 7-ந்தேதி ஹமாஸ் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் போர் காசா இதுவரை சந்தித்திராத அதிக உயிரிழப்புகளையும், கடுமையான மனிதாபிமான நெருக்கடியையும் ஏற்படுத்தி வருவதால் போரை நிறுத்தக்கோரி ஐ.நா.வும், உலக நாடுகள் பலவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் அதை திட்டவட்டமாக நிராகரித்து வரும் இஸ்ரேல் ஹமாசை ஒட்டு மொத்தமாக ஒழிக்கும் இறுதி இலக்கை எட்டும் வரை போர் தொடரும் என கூறி வருகிறது. அதற்கு ஏற்றாற்போல் தரை, கடல், வான் என 3 வழிகளில் இருந்தும் காசாவை இஸ்ரேல் ராணுவம் தாக்கி வருகிறது. இந்த மும்முனை தாக்குதலில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. பூமியின் நரகம் என்று கூறும் அளவுக்கு காசாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

இந்த நிலையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் தொற்று நோய் பரவி வருவதாக பாலஸ்தீன விவகாரங்களுக்கான ஐ.நா நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பான பாதுகாப்பு இடங்களில் சுமார் 5 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், கூட்டம் அதிகம் இருப்பதால் மக்கள் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாச தொற்று நோய்கள், வயிற்றுப்போக்கு, அம்மை உள்ளிட்ட பல நோய்கள் பரவி வருவதாகவும், மக்கள் இடமின்றி வீதிகளில் உறங்கி வருவதாகவும், புதிதாக வருவோருக்கு ஐ.நா பாதுகாப்பு இடங்களில் இடமில்லை எனவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story