ரஷியா-உக்ரைன் போர்: அணுக்கழிவு வெடிகுண்டுகளை கொண்டு தாக்குதல்? சர்வதேச அணுசக்தி முகமை விசாரணை


ரஷியா-உக்ரைன் போர்: அணுக்கழிவு வெடிகுண்டுகளை கொண்டு தாக்குதல்? சர்வதேச அணுசக்தி முகமை விசாரணை
x

கதிர்வீச்சு பொருட்கள் அடங்கிய அணுக்கழிவு வெடிகுண்டை உக்ரைன் பயன்படுத்த உள்ளதாக ரஷியா குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.

கீவ்,

உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டு வரும் போர் 8 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதலை உக்ரைனும் சளைக்காமல் எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனின் அணு மின் நிலையங்களில் அணுக் கழிவுகளைப் பயன்படுத்தி 'நாசகார' ஆயுதங்களை அந்த நாட்டு அரசு தயாரித்து வருவதாக ரஷியா குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.

இதை மறுத்துள்ள உக்ரைன் அணுசக்தி அமைப்பு ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ள ஸபோரிஷியா அணு மின் நிலையத்தில்தான் ஆபத்தான அணுக் கழிவுகளைக் கொண்டு ரஷியா ஆயுதங்களை தயாரிப்பதாக அந்த அமைப்பு எதிா்க்குற்றசாட்டை முன்வைத்துள்ளது.

இங்கிலாந்து, பிரான்ஸ், துருக்கி நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகளுடன் உரையாடிய ரஷிய பாதுகாப்புத் துறை மந்திரி சொ்கேய் ஷாய்கு, தங்கள் மீது நாசகார ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்த உக்ரைன் ஆயத்தமாகி வருவதாக குற்றம் சாட்டினாா்.

அணுக்கதிா் வீச்சுப் பொருள்களால் ஆன அந்த ஆயுதங்கள் மூலம் உக்ரைன் போரை மிகப் பெரிய அழிவுப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று உக்ரைன் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.பொதுவாக பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் அதே போல ரேடியோ கதிர்வீச்சு பொருட்கள் அடங்கிய கருவியை கொண்டு உருவாக்கப்படும் 'டர்ட்டி பாம்' எனப்படும் அணுக்கழிவு வெடிகுண்டை உக்ரைன் பயன்படுத்த உள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை மந்திரி அதிரடி தகவலை வெளியிட்டார்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டு முகாந்திரமற்றது என்று அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், அணு ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டால் தக்க பதிலடி தரும் வகையில் ரஷிய சிறப்புப் படைகள் ஒன்றிணைந்து நவீன ஏவுகணைகளை செலுத்தி ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஒத்திகையை ரஷிய அதிபர் புதின் காணொலி மூலம் பார்வையிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், 'டர்ட்டி பாம்' எனப்படும் அணுக்கழிவு வெடிகுண்டை உக்ரைன் பயன்படுத்த உள்ளதாக வெளியான தகவல் குறித்து சர்வதேச அணுசக்தி முகமை இந்த வாரம் விசாரணை நடத்த உள்ளது.


Next Story