ஈரான் தலைவரின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக ஊடக கணக்குகள் நீக்கம்


ஈரான் தலைவரின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக ஊடக கணக்குகள் நீக்கம்
x

ஈரான் தலைவர் காமினியை 50 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்பற்றுபவர்களாக உள்ளனர்.

தெஹ்ரான்,

ஈரான் நாட்டில் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக ஊடக தளங்கள் மக்களிடையே அதிக பிரபலம் வாய்ந்தது. அந்நாட்டில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட பிற சமூக ஊடகங்களை மக்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும், ஈரான் மக்கள் வி.பி.என். வழியே அவற்றை இன்னும் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்நாட்டின் தலைவராக கடந்த 1989-ம் ஆண்டு முதல் அயோத்துல்லா காமினி (வயது 84) இருந்து வருகிறார். அரசின் பல்வேறு மிக பெரிய கொள்கைகளை இறுதி முடிவு செய்யும் அதிகாரத்தில் அவர் இருக்கிறார். அவரை 50 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்பற்றுபவர்களாக உள்ளனர். பேஸ்புக்கிலும் லட்சக்கணக்கானோர் அவரை பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அவருடைய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக ஊடக கணக்குகள் நீக்கப்பட்டு உள்ளன. அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மெட்டா நிறுவனம் கடந்த மாதம் இந்த நடவடிக்கையை எடுத்தது.

ஆபத்துக்குரிய அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் பற்றிய தன்னுடைய கொள்கையை தொடர்ந்து மீறி செயல்பட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் ஆமிர்-அப்துல்லாஹியான் கூறும்போது, இது பேச்சு சுதந்திர விதிமீறல் மட்டுமின்றி, அவருடைய பதவி மற்றும் செய்திகளுக்காக அவரை பின்பற்றும் லட்சக்கணக்கானோரை புண்படுத்தும் விசயம் ஆகும் என தெரிவித்து உள்ளார்.

எனினும், இஸ்ரேலில் கடந்த அக்டோபரில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இந்த அமைப்புக்கு அளித்து வரும் ஆதரவை காமினி அதிகரித்து வருகிறார். இதனை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 8-ந்தேதி மெட்டா நிறுவனம் அவருடைய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக ஊடக கணக்குகளை நீக்கும் முடிவை எடுத்துள்ளது என கூறப்படுகிறது.


Next Story