பாகிஸ்தானில் இம்ரான்கானை தனிமை சிறையில் அடைப்பதா? ஆதரவாளர்கள் எதிர்ப்பு


பாகிஸ்தானில் இம்ரான்கானை தனிமை சிறையில் அடைப்பதா? ஆதரவாளர்கள் எதிர்ப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 8 Aug 2023 4:06 AM IST (Updated: 8 Aug 2023 4:03 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை தனிமை சிறைக்கு மாற்றியதற்கு அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமாபாத், -

பொருளாதார நெருக்கடி

பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கான் (வயது 70) கடந்த 1996-ம் ஆண்டு தெஹ்ரீப் இ இன்சாப் என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் 2018-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற அவர் அந்த நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார்.

ஆனால் பாகிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான்கானின் மோசமான ஆட்சிதான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் இவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

பதவி இழந்தார்

இந்த தீர்மானத்தில் இம்ரான்கான் தோல்வியை தழுவி தனது பிரதமர் பதவியை இழந்தார். இதனையடுத்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதாரரான ஷபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றார்.

இந்தநிலையில் பிரதமராக இருந்த காலத்தில் ஊழல், மோசடியில் ஈடுபட்டதாக இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் தோஷகானா ஊழல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

3 ஆண்டுகள் சிறை

பாகிஸ்தான் மந்திரி சபையில் உள்ள ஒரு துறையே தோஷகானா ஆகும். அங்குள்ள சட்டத்தின்படி பதவிக்காலத்தில் பெறப்பட்ட பரிசுப்பொருட்களை தோஷகானாவிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அந்த பொருட்களை விற்று இம்ரான்கான் தனது சொத்தாக மாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுவே தோஷகானா வழக்கு என அழைக்கப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதனால் இம்ரான்கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆதரவாளர்கள் போராட்டம்

இதனையடுத்து இம்ரான்கான் கைது செய்யப்பட்டு லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தனிமைச்சிறைக்கு இம்ரான்கானை மாற்றி உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள தெஹ்ரீப் இ இன்சாப் கட்சியினர் அரசின் இந்த முடிவுக்கு தங்களது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். மேலும் கோர்ட்டு நடவடிக்கைகளுக்காக வழக்கறிஞர்கள் அவரை சந்திப்பதற்கு கூட அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.


Next Story