இந்திய ஆளுங்கட்சி தலைவர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டம்; ரஷியாவில் ஐ.எஸ். பயங்கரவாதி கைது


இந்திய ஆளுங்கட்சி தலைவர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டம்; ரஷியாவில் ஐ.எஸ். பயங்கரவாதி கைது
x

இந்திய ஆளுங்கட்சி தலைவர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ். பயங்கரவாதி துருக்கியில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோ,

ரஷிய நாட்டின் தேசிய பாதுகாப்பு முகமை இன்று மாஸ்கோவில் ஐ.எஸ். பயங்கரவாதியை கைது செய்தது. கைது செய்யப்பட்ட பயங்கரவாதி இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த இந்த பயங்கரவாதி மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாட்டை சேர்ந்தவன் என தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தற்கொலைப்படை பயங்கரவாதியை ஐ.எஸ். பயங்கரவாத குழுவை சேர்ந்த தலைவன் துருக்கியில் வைத்து தேர்ந்தெடுத்ததாகவும், அங்கு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது. பயங்கரவாதியின் பெயரை ரஷியா வெளியிடவில்லை

இந்திய ஆளுங்கட்சி தலைவர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், இதற்காக துருக்கியில் இருந்து ரஷியா வந்ததாகவும், பின்னர் ரஷியாவில் இருந்து இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் அந்த பயங்கரவாதி தெரிவித்துள்ளான்.

இந்திய ஆளுங்கட்சியான பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மா கடந்த சில மாதங்களுக்கு முன் இஸ்லாமிய மதக்கடவுளின் இறை தூதர் குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, நுபுர் சர்மா பாஜகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இதனிடையே, இஸ்லாமிய மதக்கடவுளின் இறை தூதர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்காக இந்தியாவின் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் (நுபுர் சர்மா) மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக ஐஎஸ் பயங்கரவாதி தெரிவித்துள்ளான். பயங்கரவாதிக்கு துருக்கியில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை தங்கி இருந்த பயங்கரவாதி கடந்த சில நாட்களுக்கு முன் ரஷியா வந்துள்ளான். இங்கிருந்து பயங்கரவாதி இந்தியாவுக்கு சென்று ஆளும் கட்சியின் முக்கிய தலைவர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளான் என ரஷியா தெரிவித்துள்ளது.

தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தேவையான ஆயுதங்களை அந்த பயங்கரவாதி இந்தியாவில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்களுடன் பெற திட்டமிட்டிருந்ததாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐ.எஸ். பயங்கரவாதி ரஷியாவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.


Next Story