பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமறைவு: பரபரப்பு தகவல்கள்


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமறைவு: பரபரப்பு தகவல்கள்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 6 March 2023 11:48 PM GMT (Updated: 7 March 2023 1:52 AM GMT)

ஊழல் வழக்கு ஒன்றில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை போலீசார் கைது செய்ய சென்றபோது, அவர் தலைமறைவாகிவிட்டார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதை தொடர்ந்து பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றார்.

இதனிடையே பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான்கானின் ஆட்சிதான் காரணம் என குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள் அவரது அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதில் இம்ரான்கானின் அரசு கவிழ்ந்து, பிரதமர் பதவியை இழந்தார்.

பிடிவாரண்டு பிறப்பித்த கோர்ட்டு

அப்போது முதல் அவர் தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராகவும், பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்த வலியுறுத்தியும் தனது கட்சி சார்பில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

இதற்கிடையில் இம்ரான்கான் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்று சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு விசாரணையில் ஆஜராக இம்ரான்கானுக்கு 3 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து இம்ரான்கானை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்டை பிறப்பித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு லாகூர் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இஸ்லாமாபாத் போலீசார், இம்ரான்கானை கைது செய்ய லாகூரில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் மதியம் சென்றனர். ஆனால் அவரது வீட்டின் முன்பு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பிடிஐ கட்சி தொண்டர்கள் போலீசாரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். பின்னர் போலீசார் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்தனர்.

ஆனால் அங்கு இம்ரான்கான் இல்லை. அதை தொடர்ந்து போலீசார் அங்கிருந்து சென்றனர். அடுத்த சில மணி நேரங்களில் இம்ரான்கான் லாகூரில் உள்ள வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். இது போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது. அதனை தொடர்ந்து போலீசார் மீண்டும் லாகூரில் உள்ள இம்ரான்கான் வீட்டுக்கு சென்றனர்.

லாகூரில் பதற்றம்

ஆனால் அப்போதும் பிடிஐ கட்சி தொண்டர்கள் போலீசார் வீட்டுக்குள் நுழைய கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு வேளை இம்ரான்கான் கைது செய்யப்பட்டால் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடக்கும் என அவர்கள் போலீசாரை எச்சரித்தனர்.

அதே சமயம் இம்ரான்கானை கைது செய்யாமல் லாகூரில் இருந்து திரும்பி போக மாட்டோம் என இஸ்லாமாபாத் போலீசார் சூளுரைத்துள்ளனர். மேலும் இம்ரான்கானை கைது செய்யவிடாமல் தடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ள போலீசார் தொடர்ந்து லாகூரில் உள்ள இம்ரானின் வீட்டுக்கு வெளியே முகாமிட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.

துப்பாக்கிசூட்டில் உயிர் தப்பினார்

இதனிடையே பிடிஐ கட்சியின் சார்பில் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இம்ரான்கானின் உடல் நிலையை கருத்தில் கொண்டு இனி நடக்கும் வழக்குகளின் விசாரணையில் இம்ரான்கான் காணொலி காட்சி வாயிலாக ஆஜராக அனுமதி அளிக்கும்படி வலியுறுத்துப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட இம்ரான்கான் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதும், இதில் காயங்களுடன் உயிர் தப்பிய அவர், காயத்தில் இருந்து குணமடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


Next Story