பணய கைதிகள் மீட்பின்போது இஸ்ரேல் தாக்குதல்; 50 பாலஸ்தீனர்கள் பலி


பணய கைதிகள் மீட்பின்போது இஸ்ரேல் தாக்குதல்; 50 பாலஸ்தீனர்கள் பலி
x

image courtesy; AFP

இந்த நடவடிக்கையில் 2 பணயக்கைதிகளை மீட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

காசா,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி திடீரென தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், இஸ்ரேலை சேர்ந்த மக்கள் 1,200 பேர் உயிரிழந்தனர். 250 பேர் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டபோதிலும், 130-க்கும் மேற்பட்டோர் ஹமாஸ் அமைப்பின் பிடியில் உள்ளனர். ஆனால், அவர்களில் 30 பேர் மரணம் அடைந்திருக்க கூடும் என நம்பப்படுகிறது.

இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது. அவர்களை அடியோடு ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் அரசும் அறிவித்தது. தொடர்ந்து தாக்குதலை மற்றும் பயங்கரவாதிகளை தேடும் பணியை தீவிரப்படுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டு உள்ளார்.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரானது நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. காசாவில் உள்ள 23 லட்சம் பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் ராணுவ ஆக்கிரமிப்பால் எகிப்து எல்லையையொட்டிய பகுதிக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.

இந்நிலையில் பணயகைதிகளை மீட்கும் நடவடிக்கையாக ரபா நகரில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 50 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதாக தெற்கு காசா நகரமான ரபாவில் உள்ள மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையில் 2 பணயக்கைதிகளை மீட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.


Next Story