இஸ்ரேல் பணய கைதிகள் 50 பேருக்கு ஈடாக 300 பாலஸ்தீனியர்களை விடுவிக்க முடிவு


இஸ்ரேல் பணய கைதிகள் 50 பேருக்கு ஈடாக 300 பாலஸ்தீனியர்களை விடுவிக்க முடிவு
x
தினத்தந்தி 22 Nov 2023 11:31 AM GMT (Updated: 27 Nov 2023 1:01 AM GMT)

கடத்தப்பட்ட பணய கைதிகள் 240 பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 50 பேர் 4 நாட்களில் அடுத்தடுத்து விடுவிக்கப்படுவார்கள்.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் எல்லை பகுதியையும் சூறையாடி, வன்முறையில் ஈடுபட்டது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த போரில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.

இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இஸ்மாயில் ஹனியே வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இஸ்ரேலுடன் ஹமாஸ் அதிகாரிகள் போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் நெருங்கியிருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறும்போது, நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். இந்த தருணத்தில், நிறைய கூறுவது சரியாக இருக்காது. விரைவில் நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று நேற்று கூறினார்.

பணய கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் முன்னேற்றத்திற்கான விசயங்கள் பற்றி நெதன்யாகு, அவருடைய மந்திரி சபையுடன் பேசி முடிவு செய்வார் என அவருடைய அலுவலகம் தெரிவித்தது. போர்நிறுத்தத்திற்கான முதல் ஒப்பந்தம் மற்றும் இரு தரப்பிலும் பெரிய அளவில் கைதிகளை விடுவிப்பது என்பது இறுதி நிலையில் உள்ளது என்றும் அதுபற்றிய தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்து உள்ளனர். இதன்படி, கடத்தப்பட்ட 240 பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 50 பேர் 4 நாட்களில் அடுத்தடுத்து விடுவிக்கப்படுவார்கள். இதனால், இருதரப்பு மோதலும் 4 நாட்களுக்கு நிறுத்தப்படும்.

எனினும், கடத்தப்பட்ட அனைவரையும் திரும்ப கொண்டு வரும் வரை, ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக ஒழிக்கும் வரை மற்றும் இஸ்ரேலுக்கு புதிய அச்சுறுத்தல் எதுவும் விடப்படாது என்பது உறுதி செய்யப்படும் வரை இஸ்ரேல் அரசு மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தொடர்ந்து போர் செய்யும் என்றும் அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.

இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டு உள்ள 150 பாலஸ்தீனியர்களை விடுவிப்பதற்கு ஈடாக, இந்த 50 பணய கைதிகளை விடுவிப்பது என இஸ்ரேல் அரசும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பும் இன்று ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொண்டன.

இந்நிலையில், இஸ்ரேல் நீதி அமைச்சகம் அதன் வலைதளத்தில் பாலஸ்தீனிய கைதிகளின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அரசு உத்தரவின்பேரில், கைதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஒப்பந்தத்தின்படி அவர்கள் விடுவிக்கப்பட கூடும்.

பட்டியல் வெளியிடப்படும் நேரத்தில், இந்த தகவல் சரியானது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. அமைச்சகத்தின் பட்டியலின்படி 300 கைதிகளின் விவரங்கள் உள்ளன. இது, முதலில் வெளியான 150 பேர் என்ற எண்ணிக்கையை விட இரட்டிப்பாகும்.


Next Story