போர்நிறுத்த ஒப்பந்தத்தின் 5-வது நாளில் 30 பாலஸ்தீனியர்களை விடுவித்த இஸ்ரேல்


போர்நிறுத்த ஒப்பந்தத்தின் 5-வது நாளில் 30 பாலஸ்தீனியர்களை விடுவித்த இஸ்ரேல்
x
தினத்தந்தி 29 Nov 2023 3:13 AM GMT (Updated: 29 Nov 2023 4:58 AM GMT)

இஸ்ரேல் சிறையில் இருந்து, விடுவிக்கப்பட்ட கைதிகளில் 15 பேர் பெண்கள் மற்றும் 15 பேர் சிறுவர் சிறுமிகள் ஆவர்.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, அக்டோபர் 7-ந்தேதி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் எல்லை பகுதியையும் சூறையாடி, வன்முறையில் ஈடுபட்டது. 240 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது.

இரு தரப்பினருக்கும் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த இந்த போரில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். 2,700 பேர் காணாமல் போனார்கள். இந்த மோதலால், இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்தனர்.

இந்த சூழலில், எகிப்து, அமெரிக்கா மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சியின் பலனாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தன. இதன்படி, கடத்தப்பட்ட 240 பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 50 பேர் 4 நாட்களில் அடுத்தடுத்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் இதனால், இருதரப்பு மோதலும் 4 நாட்களுக்கு நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முதலில் 13 பேரும், பின்னர் 17 பேரும் என ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருந்த பணய கைதிகள் அடுத்தடுத்த நாட்களில் விடுவிக்கப்பட்டனர். 4-வது நாளில் 11 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.

இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்த நிலையில், கத்தார் நாட்டின் மத்தியஸ்த பேச்சுவார்த்தையின் பலனாக, கூடுதலாக 2 நாட்களுக்கு போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. இதனால், பணய கைதிகள் விடுவிப்புக்கான சாத்தியமும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.

போர்நிறுத்த ஒப்பந்தம் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்ட சூழலில், போர்நிறுத்த ஒப்பந்தத்தின் 5-வது நாளான நேற்று 30 பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதனை இஸ்ரேல் நாட்டின் சிறை துறை உறுதிப்படுத்தி உள்ளது என தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதுபற்றி கத்தார் வெளியிட்ட செய்தியில், விடுவிக்கப்பட்ட கைதிகளில் 15 பேர் பெண்கள் மற்றும் 15 பேர் சிறுவர் சிறுமிகள் ஆவர் என தெரிவித்து உள்ளது. ஆறு நாள் போர்நிறுத்தத்தின் 5-வது நாளான நேற்று காசாவில் இருந்து 12 பணய கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் வெளிநாட்டினர். அதில், முதியவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் அடங்குவார்கள்.

காசாவில் இருந்து 60 பெண்கள் மற்றும் குழந்தைகள் என 80-க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இஸ்ரேலில் உள்ள சிறைகளில் இருந்து 180-க்கும் கூடுதலானோர் விடுதலை செய்யப்பட்டனர்.

எனினும், அனைத்து பணய கைதிகளையும் விடுவிப்பது, ஹமாஸ் அமைப்பை அழிப்பது மற்றும் இஸ்ரேல் மக்களுக்கு காசா ஓர் அச்சுறுத்தலாக இருக்காது என்பது உறுதி செய்யப்படுவது ஆகியவற்றை செயல்படுத்துவோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று கூறினார்.


Next Story