உங்கள் மீது இஸ்ரேல் நம்பிக்கை கொண்டுள்ளது; படைகளுக்கு செய்தி அனுப்பிய ஐ.டி.எப். தலைவர்


உங்கள் மீது இஸ்ரேல் நம்பிக்கை கொண்டுள்ளது; படைகளுக்கு செய்தி அனுப்பிய ஐ.டி.எப். தலைவர்
x

உங்கள் மீது இஸ்ரேல் நம்பிக்கை கொண்டுள்ளது என படை வீரர்களுக்கு ஐ.டி.எப். தலைவர் ஊக்கமளிக்கும் செய்தியை அனுப்பியுள்ளார்.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது காசாவின் ஒரு பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் அரசும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன்படி, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் களமிறக்கப்பட்டு உள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அந்த நாட்டுக்கு ஆதரவாக ஆயுத உதவி போன்றவற்றை செய்து வருகின்றன.

ஹமாஸ் அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது என கூறப்படுகிறது. இந்த சண்டையில், பெண்கள், குழந்தைகள் உள்பட இருதரப்பிலும் பொதுமக்கள், வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர்.

ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான இஸ்ரேலின் பதிலடி தொடர்ந்து 11-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், சக வீரர்கள், தளபதிகள் மற்றும் படைகளில் உள்ளவர்களுக்கு, இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்ஜி ஹாலேவி இன்று செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், இஸ்ரேல் மீது நடந்த ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலானது, இஸ்ரேலுக்கு எதிரான ஒரு கொலைகார திடீர் தாக்குதல். எதிரிகளை வான், தரை மற்றும் கடல்வழியே தாக்கி வருகிறோம் என்று தெரிவித்து உள்ளார்.

கொடூர மற்றும் குற்ற செயல்களால் இஸ்ரேலின் இறையாண்மையை ஸ்திரமற்று போக செய்ய விரும்புகின்றனர். நம்முடைய சொந்த நாடு மற்றும் இஸ்ரேலின் சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாக்க எங்களுடைய உறுதிமொழியை நாங்கள் காத்து வருகிறோம். தொடர்ந்து 11-வது நாளாக வான், தரை மற்றும் கடல் வழியாக தாக்கி வருகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எதிரிகளின் உட்கட்டமைப்பு, தலைமை மற்றும் திறன்களை நாம் அழித்துள்ளோம். ஒரு குறிப்பிடத்தக்க பாதிப்பையும் உருவாக்கி இருக்கிறோம். எதிரியை வெற்றி கொண்டு, ஒவ்வோர் இடத்திலும் பாதுகாப்பை மீட்டெடுப்போம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு படையின் சக்தி மற்றும் ஒற்றுமை வெற்றி பெறும். இஸ்ரேலின் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். உங்கள் மீது நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story