இது ஜோக் இல்லை... எனது உறவினர்கள் இடையே கூட நீங்கள் அதிக பிரபலம்; பிரதமர் மோடியை புகழ்ந்த ஜோ பைடன்


இது ஜோக் இல்லை... எனது உறவினர்கள் இடையே கூட நீங்கள் அதிக பிரபலம்; பிரதமர் மோடியை புகழ்ந்த ஜோ பைடன்
x
தினத்தந்தி 21 May 2023 3:06 PM IST (Updated: 21 May 2023 3:36 PM IST)
t-max-icont-min-icon

திரை துறையினர், உறவினர்கள் உள்பட பலரிடையே நீங்கள் அதிக பிரபலம் அடைந்து விட்டீர்கள் என பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

டோக்கியோ,

ஜப்பானிய தலைமையின் கீழ் ஜி-7 உச்சி மாநாடு கடந்த 19-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் வரை நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க வரும்படி பிரதமர் மோடிக்கு, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா தனிப்பட்ட முறையில், விடுத்த அழைப்பின்பேரில் பிரதமர் மோடி மே 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 3 நாட்கள் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

இந்த பயணத்தில் பிரதமர் மோடி அமர்ந்திருந்த இடத்திற்கு அவரை தேடி சென்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்துகளை கூறினார். இருவரும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அதன்பின் பைடன் அவரிடம் பேசும்போது, நீங்கள் உண்மையில் எனக்கு ஒரு பிரச்சனையை உண்டு பண்ணி விட்டீர்கள்.

அடுத்த மாதம் வாஷிங்டனில் உங்களுக்கு இரவு விருந்து அளிக்க இருக்கிறோம் (பிரதமர் மோடி வருகிற ஜூன் மாதத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார்). நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் உங்களை பார்க்க வர விரும்புகிறார்கள். என்னிடம் அதற்கான டிக்கெட்டுகள் தீர்ந்து விட்டன. நான் கேலிக்காக (ஜோக்) உங்களிடம் கூறுகிறேன் என நீங்கள் நினைக்கிறீர்களா?

வேண்டுமென்றால், எனது குழுவினரிடம் நீங்கள் கேட்டு பாருங்கள். இதற்கு முன்பு நான் பேசியிராத மக்களிடம் இருந்து கூட எனக்கு தொடர்ந்து, தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. திரைப்பட துறையினரில் இருந்து, உறவினர்கள் வரை என ஒவ்வொருவரும் பேசுகின்றனர். நீங்கள் அதிக பிரபலம் அடைந்து விட்டீர்கள் என கூறியுள்ளார்.

பின்னர் அவர், குவாட் அமைப்பில் உள்ள மற்ற 3 உறுப்பினர்கள் செய்கின்ற விசயங்களை விட, ஒவ்வொரு விசயத்திலும் பிரதமர் மோடி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தாக்கம் ஏற்படுத்தி விட்டார் என்றும் பைடன் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்த உச்சி மாநாட்டில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நீடித்த வளம் ஆகியவை பற்றி உறுப்பு நாடுகளுடனான ஜி-7 கூட்டத்தொடரில் பிரதமர் மோடி பேசினார். உணவு, உரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல், உறுதியான உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு ஆகியவை பற்றியும் அவர் பேசியுள்ளார்.

உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக அதில் பங்கேற்கும் தலைவர்கள் சிலருடன் இருதரப்பு சந்திப்புகளையும் அவர் நடத்தினார். இதில், தனது நண்பரை சந்தித்ததில் மகிழ்ச்சி என ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கால்சுடனான சந்திப்பு பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

பிரான்சு நாட்டு அதிபர் மேக்ரானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். ஜி-7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும், பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார். ரஷியாவின் போருக்கு பின் இரு தலைவர்களின் முதல் சந்திப்பு இதுவாகும்.

அமெரிக்க அதிபர் பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஜப்பானிலேயே குவாட் உச்சி மாநாடு நடத்த முடிவானது. இதன்படி, குவாட் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் தொடங்கி நேற்று நடந்தது.

இதில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகிய 4 நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டு விவாதித்தனர்.

1 More update

Next Story