லண்டன்: இந்திய தூதரகம் முன் காலிஸ்தானியர்கள் இந்திய எதிர்ப்பு போராட்டம், பதற்றம்; போலீசார் குவிப்பு


லண்டன்:  இந்திய தூதரகம் முன் காலிஸ்தானியர்கள் இந்திய எதிர்ப்பு போராட்டம், பதற்றம்; போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 22 March 2023 3:11 PM GMT (Updated: 22 March 2023 3:21 PM GMT)

இங்கிலாந்தில் லண்டன் நகரில் இந்திய தூதரகம் முன் காலிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்திய நிலையில், பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.



லண்டன்,


வெளிநாடுகளில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்துவது சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. நடப்பு வருட தொடக்கத்தில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவில்களை இலக்காக கொண்டு தாக்குதல்கள் நடந்து உள்ளன.

இவற்றில் ஆஸ்திரேலியாவில் கடந்த ஜனவரியில் அடுத்தடுத்து 3 கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் கோவில் சுவர்களில் எழுதப்பட்டன.

இந்து கோவில்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தி, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் அதில் எழுதி இருந்தது பரபரப்பு ஏற்படுத்தியது. இந்துக்கள் மீது வெறுப்பை உமிழும் இந்த செயல்களால், பல்வேறு இந்தியர்கள் மற்றும் சீக்கிய தலைவர்களும் வருத்தம் அடைந்தனர்.

இதன்பின்னர் சமீபத்தில் இந்தியா வருகை தந்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசு, கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மதவழிபாட்டு கட்டிடங்கள் மீது நடத்தப்படும் எந்தவித தாக்குதல்களையும் அரசு சகித்து கொள்ளாது என கூறினார்.

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள இந்திய தூதரகம் முன் காலிஸ்தானியர்கள் ஒன்று திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து அவர்கள், இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர். இதனால், போலீசார் அவர்களை கட்டுப்படுத்தும் வகையில், தடுப்பான்களை அமைத்தனர். ஆனால், அவற்றை நீக்கி விட்டு, தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.

இதனால், அந்த பகுதியில், பாதுகாப்புக்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே லண்டன் பெருநகர போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.




Next Story