யூரல் மலைப்பகுதியில் வேகமாக உருகும் பனி.. ரஷியா, கஜகஸ்தானில் கடும் வெள்ளப்பெருக்கு


யூரல் மலைப்பகுதியில் வேகமாக உருகும் பனி.. ரஷியா, கஜகஸ்தானில் கடும் வெள்ளப்பெருக்கு
x

ரஷியாவும், கஜகஸ்தானும், கடந்த 5 நாட்களுக்கும் மேலாக ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை சமாளிக்க கடுமையாக போராடி வருகின்றன.

மாஸ்கோ:

ரஷியா மற்றும் அண்டை நாடான கஜகஸ்தானில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ரஷியாவின் தெற்கு யூரல் மலைப்பகுதி, மேற்கு சைபீரியா மற்றும் வடக்கு கஜகஸ்தானில் உள்ள மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவை தாண்டி ஓடுகிறது. இதன் காரணமாக கரையோரங்களில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல்வேறு பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷியாவும், கஜகஸ்தானும், கடந்த 5 நாட்களுக்கும் மேலாக ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை சமாளிக்க கடுமையாக போராடி வருகின்றன. இரு நாடுகளும் அவசரகால நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளன. இரு நாடுகளிலும் சேர்த்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

"நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஆறுகளில் தண்ணீர் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்னும் அதிகரிக்கும். புதிய பகுதிகளுக்கு தண்ணீர் வரத் தொடங்கியிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில், அதிபர் புதின், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்யும் திட்டம் எதுவும் இல்லை. பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக தொடர்ந்து அதிபருக்கு தெரிவிக்கப்படுகிறது" என ரஷிய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.

யூரல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஆர்ஸ்க் நகருக்குள் தண்ணீர் புகுந்து நகரமே தத்தளிக்கிறது. இன்று ஓரன்பர்க் நகருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. 550,000 மக்கள் வசிக்கும் ஓர்ஸ்க் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நீர்மட்டம் 81 செமீ என்ற அளவுக்கு உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1947-க்கு பிறகு இதுபோன்ற வெள்ளத்தை கண்டதில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஓரன்பர்க்கில் உள்ள யூரல் ஆற்றின் ஆழம் 996 செமீ. (33 அடி). நேற்றைய நிலவரப்படி, 930 செமீ அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறும்படி நகர நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.


Next Story