அமீரகத்தின் ராஷித் ரோவரை சுமந்து செல்லும் ஹக்குட்டோ-ஆர் விண்கலம், நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது


அமீரகத்தின் ராஷித் ரோவரை சுமந்து செல்லும் ஹக்குட்டோ-ஆர் விண்கலம், நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது
x

அமீரகத்தின் ராஷித் ரோவரை சுமந்து செல்லும் ஜப்பான் நாட்டின் ஹக்குட்டோ-ஆர் விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்து தனது முதல் புகைப்படத்தை அனுப்பி உள்ளது.

இது குறித்து துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையம் வெளியிட்டுள்ள தகவல்களில் கூறியிருப்பதாவது:-

நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது

அமீரகத்தில் முழுவதும் உருவாக்கப்பட்ட ராஷித் ரோவர் வாகனம் கடந்த டிசம்பர் மாதம் 11-ந் தேதி அமெரிக்காவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டு ஹக்குட்டோ-ஆர் விண்கலத்தில் பயணம் செய்து வருகிறது. குறைந்த எரிபொருள் பாதையில் இந்த விண்கலம் பயணம் செய்து தற்போது 4 மாதங்களுக்கு பிறகு நிலவை நெருங்கி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் பூமியில் இருந்து சுமார் 4½ லட்சம் கி.மீ. தொலைவில் பயணம் செய்து வந்த ஹக்குட்டோ ஆர் விண்கலம் அடுத்த கட்ட பாதைக்கு அதாவது நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைய திருப்பி விடப்பட்டது. இதனை அடுத்து ஹக்குட்டோ ஆர் விண்கலம் தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதையை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் அடைந்துள்ளது.

துல்லியமாக பதிவு

பூமியை நிலவு வட்டமடிக்கும் சுற்று வட்டப்பாதையில் தற்போது ராஷித் ரோவருடன் ஹக்குட்டோ ஆர் விண்கலம் நுழைந்துள்ளதால் ஈர்ப்பு விசை காரணமாக நிலவை சுற்றி வருகிறது. இந்த நிலையில் அந்த ஹக்குட்டோ-ஆர் விண்கலம் நிலவை மிக நெருக்கமாக புகைபடம் எடுத்து அனுப்பி உள்ளது. இதில் பக்கவாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நிலவில் உள்ள மேடு, பள்ளங்கள் மிக துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2-வது கட்டமாக தாழ்வான வளிமண்டல அடுக்கில் பயணம் செய்ய உள்ளது. பின்னர், 3-வது கட்டமாக நிலவின் உள்ளே நுழைந்து தரையிறங்க உள்ளது.

அட்லஸ் கிரேட்டர்

இது மிகவும் சிக்கலான கட்டமாகும், வேகத்தை குறைத்து கவனமாக தரையிறக்கப்பட வேண்டும். நிலவில் தரையிறங்க அட்லஸ் கிரேட்டர் என்ற பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக கூடுதலாக 2 பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நிலவில் ராஷித் ரோவர் கால் பதிக்கும் சரியான நாள் மற்றும் நேரம் வரும் நாட்களில் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story