ரஷியா-வடகொரியா ஒப்பந்தத்திற்குப்பின் லாவ்ரவ் வடகொரியா பயணம்


ரஷியா-வடகொரியா ஒப்பந்தத்திற்குப்பின் லாவ்ரவ் வடகொரியா பயணம்
x
தினத்தந்தி 25 Sep 2023 4:28 AM GMT (Updated: 26 Sep 2023 4:55 AM GMT)

ரஷிய மற்றும் வடகொரிய தலைவர்களின் சந்திப்புக்கு பின் போடப்பட்ட ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக வடகொரியாவுக்கு லாவ்ரவ் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபையின் 78-வது கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். இந்த சூழலில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவ் கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறும்போது, வருகிற அக்டோபரில் வடகொரியாவுக்கு பயணம் செய்ய இருக்கிறேன். ரஷிய அதிபர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-அன் சந்திப்புக்கு பின்னான தொடர் நடவடிக்கையாக இது இருக்கும் என கூறியுள்ளார்.

இதனால், லாவ்ரவ் பயணத்தின்போது, வடகொரியாவுக்கான புதினின் பயணம் பற்றி ஆலோசிக்கப்படும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கேற்ப, வடகொரியாவுக்கு வருகை தரும்படி, இந்த மாத தொடக்கத்தில் புதினிடம், கிம் ஜாங்-அன் கூறினார்.

உக்ரைனுக்கு எதிராக ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. ஒன்றரை ஆண்டுகளாக போரானது நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இதில், ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. எனினும், போரானது முடிவுக்கு வராமல் உள்ளது. இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இந்த மாத தொடக்கத்தில் ரஷியாவுக்கு பயணம் செய்தது பரபரப்பாக பார்க்கப்பட்டது.

கொரோனா பெருந்தொற்றின்போது, ரஷியாவை ஒட்டியுள்ள வடகொரியாவின் எல்லைகள் மூடப்பட்டன. பெருந்தொற்று பரவலுக்கு பின்னர், முதன்முறையாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், ரஷியாவுக்கு இந்த மாத தொடக்கத்தில் பயணம் மேற்கொண்டார். அனைத்து கெட்ட சக்திகளையும் தண்டித்து, போரில் ரஷியா வெற்றி பெறும் என்று புதினிடம், கிம் ஜாங் அன் கூறினார்.

இதனால், இரு நாடுகளுக்கும் இடையே, ஆயுத ஒப்பந்தங்கள் நடைபெற்று இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்தது.

வடகொரியா மற்றும் ரஷியா இடையேயான ஆயுத விற்பனைக்கு எதிராக நாங்கள் முன்பே தடைகளை விதித்து இருக்கிறோம். தேவைப்பட்டால், கூடுதல் தடைகளை விதிக்கவும் நாங்கள் தயங்கமாட்டோம் என தெரிவித்தது.


Next Story