யூத எதிர்ப்பு சர்ச்சைக்கு இடையே... இஸ்ரேல் அதிபருடன் நாளை மஸ்க் சந்திப்பு


யூத எதிர்ப்பு சர்ச்சைக்கு இடையே... இஸ்ரேல் அதிபருடன் நாளை மஸ்க் சந்திப்பு
x
தினத்தந்தி 27 Nov 2023 3:16 AM GMT (Updated: 27 Nov 2023 3:25 AM GMT)

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவையும், எலான் மஸ்க் சந்தித்து பேச கூடும் என கூறப்படுகிறது.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே நடந்து வரும் மோதலை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வந்தன.

இதில் சமீபத்தில், மஸ்க்கின் எக்ஸ் சமூக வலைதளத்தில், யூதர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் மற்றும் பல பொய்யான தகவல்கள் வெளிவந்தன என குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தடுக்க தவறி விட்டார் என எலான் மஸ்கிற்கு எதிராக விமர்சனங்கள் கிளம்பின. இதில், யூத எதிர்ப்பு பற்றி வெளிவந்த தகவல்களை மஸ்க், அவருடைய பதிவில் பகிர்ந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால், ஆப்பிள், டிஸ்னி போன்ற பெரிய நிறுவனங்கள் அந்த வலைதளத்தில் தங்களுடைய விளம்பரத்திற்கான செலவை குறைத்தனர்.

எனினும், பேச்சு சுதந்திரம் பறிக்கப்படுவதுடன், உண்மையான பயனாளர்களின் அனுபவங்களை முற்றிலும் தவறாக பிரதிபலித்து விட்டது என கூறி மீடியா மேட்டர்ஸ் என்ற ஊடக கண்காணிப்பு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர போகிறேன் என்று மஸ்க் கூறினார்.

இந்த பரபரப்பான சூழலில், அந்நாட்டின் அதிபர் ஈசாக் ஹெர்ஜாக்கை நாளை நேரில் சந்தித்து பேச மஸ்க் திட்டமிட்டு உள்ளார் என தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

இதனை அதிபரின் அலுவலகமும் உறுதி செய்துள்ளது. இந்த சந்திப்பின்போது, காசாவில் பிடித்து வைக்கப்பட்டு உள்ள பணய கைதிகளின் குடும்பத்தினர் சிலரும் கலந்து கொள்ள உள்ளனர் என கூறிய அதிபர் ஹெர்ஜாக், ஆன்லைனில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பை எதிர்கொள்ள, செயல்பட வேண்டியதன் அவசியம் பற்றி மஸ்கிடம் வலியுறுத்தப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவையும், எலான் மஸ்க் சந்தித்து பேச கூடும் என கூறப்படுகிறது.


Next Story