உக்ரைனில் ஊழல் குற்றச்சாட்டில் தேசிய பாதுகாப்பு படை அதிகாரி நீக்கம்; அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி


உக்ரைனில் ஊழல் குற்றச்சாட்டில் தேசிய பாதுகாப்பு படை அதிகாரி நீக்கம்; அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி
x

உக்ரைனில் ஊழல் குற்றச்சாட்டில் தேசிய பாதுகாப்பு படை அதிகாரியை பணி நீக்கம் செய்து அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார்.



கீவ்,


உக்ரைனுக்கு எதிரான ரஷியா தொடுத்துள்ள படையெடுப்பானது, இந்த மாத இறுதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாக உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய போரானது நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த சூழலில், உக்ரைனில் சமீப வாரங்களாக ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாக எண்ணற்ற அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கி அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அவர்கள் மீது விசாரணையும் தொடங்கப்பட்டு உள்ளது.

உக்ரைன் தங்களது உறுப்பினர்களில் ஒரு நாடாக ஆவதற்கு முதலில், அந்நாடு ஊழலை ஒழிக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் குறிப்பிட்டு உள்ளது.

இதன்படி, உக்ரைன் அதிபர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், தேசிய பாதுகாப்பு படையின் துணை தளபதியான ருஸ்லான் டிஜூபா பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என தெரிவித்து உள்ளது. எனினும், பணி நீக்கத்திற்கான காரணங்கள் எதனையும் அந்நாடு வெளியிடவில்லை.

அதிபர் ஜெலன்ஸ்கி அதிகாரிகளுடனான கூட்டத்தில் பேசும்போது, ஊழலற்ற பாதுகாப்பு அமைச்சகம் அவசியம் என குறிப்பிட்டதுடன், அமைப்புகளை அதுபோன்ற ஊழல் முயற்சிகளுக்கு எதிராக பாதுகாக்கும் செயல் திட்டங்களை கொண்டு வரும்படி பாதுகாப்பு மற்றும் போலீசார் பிரிவுகளிடம் அவர் கேட்டு கொண்டார்.

குற்ற செயல்களுக்கு எதிரான நடவடிக்கை மட்டுமின்றி, பாதுகாப்பு அமைப்புகளை நவீனமயம் ஆக்கும் முயற்சிகளும் தொடரும் என ஜெலன்ஸ்கி கூட்டத்தில் பேசும்போது கூறியுள்ளார்.


Next Story