நவால்னியின் 'ரகசிய இறுதிச் சடங்கிற்கு' அழுத்தம் தருகின்றனர்: தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு


நவால்னியின் ரகசிய இறுதிச் சடங்கிற்கு அழுத்தம் தருகின்றனர்: தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு
x

கோப்புப்படம்

அலெக்சி நவால்னி திடீரென சிறையிலேயே உயிரிழந்ததாக கடந்த வாரம் ரஷிய ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.

மாஸ்கோ,

ரஷிய அதிபர் புதினையும், அவரது கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. இதனால் அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் இவர் மீதான ஆதரவு பெருகியது. இதனையடுத்து கடந்த 2013-ல் அவர் மீது பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், கோர்ட்டு அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு மொத்தம் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2021ம் ஆண்டு முதல் அலெக்சி நவால்னி சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.

இந்த சூழலில் அலெக்சி நவால்னி திடீரென சிறையிலேயே உயிரிழந்ததாக கடந்த வாரம் ரஷிய ஊடகங்களில் செய்தி வெளியானது. அவரது உயிரிழப்புக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக அலெக்சி நவால்னி கடந்த 2021-ல் டாம்ஸ்க் நகரில் இருந்து மாஸ்கோவுக்கு சென்றபோது விமானத்தில் அவர் குடித்த தேநீரில் விஷம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ரஷிய அரசாங்கத்துக்கு தொடர்பு இருப்பதாக ஜெர்மனி குற்றம்சாட்டியது. ஆனால் இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுப்பதாக ரஷிய அரசாங்கம் தெரிவித்தது. இந்த சூழலில் அலெக்சி நவால்னி மர்மமான முறையில் சிறையில் உயிரிழந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நவால்னியின் உடலை ரகசியமாக புதைப்பதற்கு அனுமதிக்கவேண்டும் என ரஷிய அதிகாரிகள் அழுத்தம் தருவதாக அவரது தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக மேலும் கூறிய அவர், "நவால்னி உடல் வைக்கப்பட்டுள்ள பிரேத அறைக்கு என்னை கூட்டிச் சென்றனர். நான் அங்குள்ள ஆவணங்களில் கையெழுத்திட்டேன். சட்ட விதிகளின்படி அதிகாரிகள் எனது மகனின் உடலை ஒப்படைக்க வேண்டும். ஆனால் தற்போது என்னை மிரட்டுகின்றனர். உடலை வழங்க மறுக்கின்றனர்.

எனது மகனின் உடலை புதைப்பதற்கு அதிகாரிகள் நிபந்தனை விதிக்கின்றனர். உடலை புதைக்கும் நேரம் உள்பட தாங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என அழுத்தம் கொடுக்கின்றனர். ரகசியமாக உடலை புதைப்பதற்கு இணங்காவிட்டால் உடலுக்கு ஏதாவது தீங்கு செய்துவிடுவோம் என மிரட்டினர்" என்று நவால்னியின் தாயார் தெரிவித்தார்.

இதனிடையே 48 மணி நேரத்திற்குள் தனது மகனின் உடலை ஒப்படைக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் நவால்னியின் தாயார் புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story