யாராலும் எங்களை தடுத்து நிறுத்த முடியாது - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு


யாராலும் எங்களை தடுத்து நிறுத்த முடியாது  -  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
x
தினத்தந்தி 15 Jan 2024 4:06 PM GMT (Updated: 15 Jan 2024 4:10 PM GMT)

இனப்படுகொலை செய்வதாக இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்ரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளது.

ஜெருசலேம்,

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் நுழைந்து ஹமாஸ் தாக்குதல் நடத்தி சுமார் 240 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றது. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1,300 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஹமாஸை அழிக்கப் போவதாக கூறி காசா மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. அப்போதிருந்து இதுவரை காசாவில் 23,750-க்கும் அதிகமான பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாலத்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப் படுகொலையில் ஈடுபடுகிறதா என்பது குறித்து விசாரிக்க வலியுறுத்தி சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்ரிக்கா வழக்கு தொடர்ந்தது. இனப் படுகொலை தொடர்பான 1948-ம் ஆண்டு உடன்படிக்கையை இஸ்ரேல் மீறுவதாக தென் ஆப்ரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது, இஸ்ரேல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கலித் ரகுவான் (Galit Raguan), ராணுவ நோக்கங்களுக்கு இடையூறாக ஹமாஸ் மேற்கொண்ட நடவடிக்கைகளே இந்த பாதிப்புகளுக்கு காரணம். இதை இனப்படுகொலைக்கான ஆதாரமாக கருத முடியாது என குறிப்பிட்டார்.

காசாவில் இனப் படுகொலை செய்வதாக இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்ரிக்கா வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், யாராலும் எங்களை தடுத்து நிறுத்த முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். வெற்றி பெறும் வரை தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.


Next Story