இலங்கையில் இருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி செல்வார் என நினைக்கவே இல்லை; சனத் ஜெயசூர்யா


இலங்கையில் இருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி செல்வார் என நினைக்கவே இல்லை; சனத் ஜெயசூர்யா
x

இலங்கையில் இருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி செல்வார் என நினைக்கவே இல்லை என்று முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா கூறியுள்ளார்.



கொழும்பு,



இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவை மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றை விலை கொடுத்து வாங்க முடியாத சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது.

அதன் அண்டை நாடான இந்தியா உரம், மருந்து உள்ளிட்ட பொருட்களை வழங்கி உதவிக்கரம் நீட்டி வருகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால், அந்நாட்டில் பல மாதங்களாக போராட்டம் நீடித்து வருகிறது.

அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சூழலில், ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 9ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். எனினும், போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். அவர் எங்கிருக்கிறார் என தெரியாத நிலையில், கோத்தபயா தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு இன்று அதிகாலை ராணுவ விமானத்தில் தப்பி சென்று விட்டார் என தகவல் வெளியானது.

இதுபற்றி முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா கூறும்போது, இலங்கையில் இருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி செல்வார் என நினைக்கவே இல்லை என்று கூறியுள்ளார். இதுபோன்று நடக்கும் என ஒருபோதும் நான் நினைக்கவில்லை.

அவர் பதவி விலகி நாட்டிலேயே தொடர்ந்து இருப்பார் என நாங்கள் நினைத்தோம். துரதிர்ஷ்டவசத்தில் அது நடக்கவில்லை. இலங்கையில் இருந்து இன்று காலை மாலத்தீவுக்கு சென்று விட்டார் என கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக எரிபொருள், மின்சாரம், கியாஸ் மற்றும் சுகாதார நெருக்கடியை இலங்கைவாசிகள் சந்தித்தனர். மக்களுக்கு தேவையானவை இல்லை. நீண்டகாலம் அனைத்து நெருக்கடிகளையும் எதிர்கொண்ட அவர்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

எனினும், போராட்டம் பெருமளவில் தொடர்ந்து அமைதியாகவே நடந்து முடிந்தது என கூறியுள்ளார். இலங்கை மக்களுக்கு வாழ்க்கை கடினம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது. இருந்தபோதும், கோத்தபய ராஜபக்சே பதவி விலகவில்லை என்றும் சனத் ஜெயசூர்யா கூறியுள்ளார்.


Next Story