இது 3வது முயற்சி.. இந்த வாரத்திலேயே உளவு செயற்கைக்கோளை ஏவ தயாராகும் வட கொரியா


இது 3வது முயற்சி.. இந்த வாரத்திலேயே உளவு செயற்கைக்கோளை ஏவ தயாராகும் வட கொரியா
x

எச்சரிக்கையை மீறி செயற்கைக்கோளை செலுத்தினால் கொரிய அமைதி ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்படும் என்று தென் கொரியா கூறியிருக்கிறது.

சியோல்,

வட கொரியா, தென் கொரியா நாடுகளுக்கிடையிலான மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா மேற்கொள்ளும் ஏவுகணை சோதனைகள், போர் ஒத்திகை போன்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. பதற்றத்தை தணிக்க சமாதான ஒப்பந்தம் போடப்பட்டிருந்தாலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

வட கொரியாவை கண்காணிக்கும் வகையில், தென் கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை வரும் 30 ஆம் தேதி செலுத்த திட்டமிட்டுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விமானப்படை தளத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் செலுத்தப்படுகிறது. ஸ்பேஸ் எக்ஸ் உடனான ஒப்பந்தத்தின் கீழ், தென் கொரியா மேலும் நான்கு உளவு செயற்கைக்கோள்களை 2025க்குள் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

இதேபோல் தென் கொரியாவை கண்காணிப்பில் வைத்திருக்க விரும்பும் வட கொரியாவும் சொந்த உளவு செயற்கைக்கோளை செலுத்துவதில் மும்முரமாக உள்ளது. ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் இரண்டு முயற்சிகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியில் முடிந்தன.

அக்டோபரில் மூன்றாவது முயற்சியை மேற்கொள்வதாக வட கொரியா கூறியிருந்தது. ஆனால் திட்டம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வாரத்திலேயே உளவு செயற்கைக்கோளை செலுத்த திட்டமிட்டிருப்பதாக வட கொரியா கூறியிருக்கிறது. டிசம்பர் 2 ஆம் தேதிக்கு முன்னர் செயற்கைக்கோளை ஏவும் பணி நடைபெறும் என வட கொரியா சார்பில் ஜப்பானுக்கு முறைப்படி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, ஜப்பான் மற்றும் தென் கொரியா அரசுகள், மஞ்சள் மற்றும் கிழக்கு சீனக் கடலில் உள்ள தங்கள் நாட்டு கப்பல்களுக்கு கடல்சார் எச்சரிக்கை விடுத்துள்ளன.

வட கொரியாவின் முக்கிய எதிரி நாடுகளில் ஜப்பானும் ஒன்று. ஆனாலும், செயற்கைக்கோள் ஏவும் கடற்பகுதியில் உள்ள நீரைக் கண்காணிக்கும் சர்வதேச கடல்சார் அமைப்பின் ஒருங்கிணைப்பு அதிகாரம் கொண்ட நாடாக ஜப்பான் இருப்பதால், வட கொரியா முறைப்படி தனது திட்டத்தை தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் உளவு செயற்கைக்கோள் திட்டத்திற்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வட கொரியாவின் திட்டம் செயற்கைக்கோளை ஏவுவதை நோக்கமாக கொண்டிருந்தாலும், பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறும் செயல் என்று செய்தியாளர்களிடம் புமியா கிஷிடா தெரிவித்தார். இது தேசிய பாதுகாப்பை பெரிதும் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

உளவு செயற்கைக்கோள் ஏவுவதை ரத்து செய்யும்படி வட கொரியாவை வலியுறுத்துவதற்காக, அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து செயல்படும் என்றும் கிஷிடா கூறினார்.

இதேபோல் வட கொரியா தனது முயற்சியை கைவிட வேண்டும் என்று தென் கொரியாவும் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையை மீறி செயற்கைக்கோளை செலுத்தினால் கொரிய அமைதி ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்படும் என்றும், எங்கள் மக்களை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றும் தென் கொரியா தெரிவித்துள்ளது.

ஆனால் உளவு செயற்கைக்கோளை ஏவுவதில் உறுதியாக உள்ளது வட கொரியா. இரண்டு முறை தோல்வியடைந்தாலும் இந்த முறை மிஸ் ஆகாது என்ற நம்பிக்கையில் இருக்கிறது.


Next Story