வடகொரியாவின் அணு ஆயுத பயன்பாடு சட்ட அறிவிப்பு - பிரான்ஸ் கண்டனம்


வடகொரியாவின் அணு ஆயுத பயன்பாடு சட்ட அறிவிப்பு - பிரான்ஸ் கண்டனம்
x

வடகொரியாவின் நடவடிக்கை அணு ஆயுதமற்ற பேச்சு வார்த்தைக்கான சாத்தியத்தை முற்றிலும் நீக்குகிறது என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

பாரிஸ்,

போர் அச்சுறுத்தல்களின் போது தங்களை பாதுகாத்துக்கொள்ள அணு ஆயுதங்களை "தானாகவே" பயன்படுத்துவதற்கான சட்டத்தை வடகொரியா இயற்றியுள்ளது. வடகொரியா தனது அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் "பேரழிவு நெருக்கடியை" தடுக்க அணுகுண்டுகளைப் தானாக பயன்படுத்தலாம் என்றும் இந்த சட்டம் கூறுகிறது.

இது குறித்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், இந்த சட்டம் நாட்டின் அணுசக்தி நிலையை உறுதிப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கை என தெரிவித்தார். மேலும் நாட்டின் அணுசக்தியை வலுப்படுத்தும் எண்ணத்தை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என கிம் உறுதியாக தெரிவித்துள்ளார்.

திரும்பப் பெற முடியாத வகையில் நிறைவேற்றபட்டுள்ள இந்த சட்டத்தால் உலக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்டத்தால் அண்டை நாடுகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வடகொரியாவின் அணு ஆயுதம் தொடர்பான சட்டத்திற்கு பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"வடகொரியாவின் அணு ஆயுத பயன்பாடு சட்ட அறிவிப்பு கண்டிக்கத்தக்கது. வடகொரியாவின் இந்த புதிய அறிவிப்பு சர்வதேச மற்றும் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது வடகொரியாவின் நடவடிக்கை அணு ஆயுதமற்ற பேச்சு வார்த்தைக்கான சாத்தியத்தை முற்றிலும் நீக்குகிறது."

இவ்வாறு பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story