பாகிஸ்தான்: 8 நீதிபதிகளுக்கு ரசாயன பொடி தடவிய கொலை மிரட்டல் கடிதங்கள்


பாகிஸ்தான்:  8 நீதிபதிகளுக்கு ரசாயன பொடி தடவிய கொலை மிரட்டல் கடிதங்கள்
x

நீதிபதிகளுக்கு எதிரான மிரட்டல் கடிதத்தில், தெஹ்ரீக் நமூஸ்-இ-பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் பெயரும், ஆந்த்ராக்ஸ் என்ற பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஐகோர்ட்டில் 8 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் அச்சுறுத்தல் கடிதங்கள் வந்துள்ளன. ரெஷாம் என்ற பெண் பெயரில் அந்த கடிதங்கள் வந்துள்ளன.

இதில், தலைமை நீதிபதி ஆமிர் பரூக் உள்பட ஒவ்வொரு நீதிபதியையும் குறிப்பிட்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. கடிதத்தின் வெளியே, வெள்ளை நிறத்தில் ரசாயன பொடி தடவப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக, அந்த கடிதங்களை திறக்க வேண்டாம் என்று நீதிபதிகளின் பணியாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அச்சம் மற்றும் துன்புறுத்தல் வழியே நீதிமன்ற முடிவுகள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று சம்பவம் பற்றி நீதிபதியின் பணியாளர்களில் ஒருவரான காதீர் அகமது கூறினார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் 8 கடிதங்களையும் பறிமுதல் செய்தனர். எனினும், 4 கடிதங்கள் முன்பே திறக்கப்பட்டு விட்டன. அதில் கடிதமொன்றில், தெஹ்ரீக் நமூஸ்-இ-பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆந்த்ராக்ஸ் என்ற பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த வகை பொடியானது, மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடியது. நச்சுகள் உடனடியாக உடலில் பரவி விடும். நீண்டகாலம் இதற்கு சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டி வரும். மரணம் விளைவிக்கும் ஆபத்தும் நிறைந்தது.

சமீபத்தில், இவர்களில் 6 நீதிபதிகள் அதிர்ச்சியான கடிதம் ஒன்றை சுப்ரீம் நீதிமன்ற கவுன்சிலுக்கு அனுப்பி இருந்தனர். அதில், நீதிபதிகளுக்கு நெருக்கடி தரும் வகையில், அவர்களின் உறவினர்களை கடத்தி, சித்ரவதை செய்ய திட்டமிட்டு உள்ளனர். வீடுகளுக்குள் கண்காணிப்பு விசயங்களை செய்ய உள்ளனர் என தெரிவித்து இருந்தனர்.

இதனை தொடர்ந்து, பாகிஸ்தானின் தலைமை நீதிபதி காஜி பயஸ் ஈசா, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அடங்கிய ஒரு கூட்டம் ஒன்றை நடத்தி இந்த விவகாரம் பற்றி ஆலோசனை மேற்கொண்டார். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும், ஈசாவை நேரில் சந்தித்து பேசினார். இதுபற்றி 7 பேர் கொண்ட அமர்வு விசாரணை மேற்கொள்ள உள்ளது.


Next Story