பாகிஸ்தான் வெள்ளம்; அரசின் அலட்சியம்: சாலை செப்பனிடும் பணியில் மக்களே இறங்கிய அவலம்


பாகிஸ்தான் வெள்ளம்; அரசின் அலட்சியம்: சாலை செப்பனிடும் பணியில் மக்களே இறங்கிய அவலம்
x

பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புகளை அரசு சரிசெய்யும் என காத்திருந்து, சலிப்படைந்து மக்களே சாலையை செப்பனிடும் பணியில் இறங்கிய அவலம் ஏற்பட்டு உள்ளது.கோஹிஸ்தான்,பாகிஸ்தானில் 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நகரெங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வெள்ள பாதிப்புகள் தொடர்ந்து, மக்களை மீள முடியாத நிலைக்கு கொண்டு சென்று விட்டுள்ளது.

கடுமையான மழைப்பொழிவு, வெள்ளம் ஆகியவற்றை முன்னிட்டு நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது. அந்நாட்டில் தொடர்ந்து மீட்பு, நிவாரண மற்றும் மறுகுடியமர்த்தும் பணிகள் நடந்து வருகின்றன.

பாகிஸ்தானில், கனமழையால் கடந்த ஜூனில் இருந்து 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், அந்நாட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அரசு சீர்செய்யும் என்று கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கோஹிஸ்தான் மாவட்ட மக்கள் காத்திருந்துள்ளனர்.

வெள்ளம் சூழ்ந்து, அருகேயுள்ள பகுதிகளுக்கு கூட மக்களால் செல்ல முடியவில்லை. சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. இதனால், குடியிருப்புவாசிகள் தொடர் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர்.

இந்த நிலையில், சாலை உட்கட்டமைப்பு பணிகளை சரிசெய்யும் பணியில் அரசு கவனம் செலுத்தவில்லை. நீண்ட நாட்களாக காத்திருந்த மக்கள் இதனால் சலிப்படைந்து போனார்கள். அதனால், அவர்களே சாலையை சரிசெய்யும் பணியில் இறங்கி விட்டனர்.

அவர்கள் கைகளில் என்ன கிடைக்கின்றதோ அவற்றை கொண்டு சாலையை சரி செய்ய புறப்பட்டு விட்டனர். மரம், களிமண் மற்றும் சரளை கற்கள் என கிடைத்தவற்றை கொண்டு, அவர்களே பாதையை சரி செய்ய தொடங்கியுள்ளனர்.

இதுபற்றி ஸ்வட் நகரில் உள்ள கலாம் பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் ஹபிபுல்லா என்பவர் கூறும்போது, அரசாங்கத்திற்காக நாங்கள் காத்திருந்தோம் என்றால், அவர்கள் சாலைகளை சீரமைக்க வருட கணக்கில் ஆகும்.

கடந்த காலத்தில் கூட, இதுபோன்று தரை வழிப்பாதையை சரி செய்ய அதிகாரிகள் நீண்டகாலம் எடுத்து கொண்டனர். அதனால், நாங்களே சிறிய கருவிகளை கொண்டு சாலையை அமைக்கும் பணியில் இறங்கி விட்டோம் என கூறியுள்ளார். அவருடன் 200 உள்ளூர்வாசிகள் சேர்ந்து கலாம் பகுதியில் இருந்து பஹ்ரைன் நோக்கி செல்லும் சாலையை செப்பனிடும் பணியை மேற்கொண்டு உள்ளனர்.

தொடர்ந்து சாலைகள் முடக்கப்பட்டால், மேடான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உணவு, மருந்து வசதிகள் கிடைக்காமல் உயிரிழக்கும் சூழல் உள்ளது. அரசே இதற்கு பொறுப்பேற்க வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story