பாகிஸ்தான்: விபத்தில் சிக்கிய இம்ரான் கானின் பாதுகாப்பு வாகனம்


பாகிஸ்தான்: விபத்தில் சிக்கிய இம்ரான் கானின் பாதுகாப்பு வாகனம்
x

பாகிஸ்தானில் கோர்ட்டில் ஆஜராக செல்லும் வழியில் இம்ரான் கானின் பாதுகாப்பு வாகனம் விபத்தில் சிக்கியது.கராச்சி,


பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்தபோது பெறப்பட்ட பரிசுகளை, குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு விற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை கைது செய்ய, ஜாமீன் பெற முடியாத வகையில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்த கைது வாரண்டை நிறுத்தி வைக்கும்படி இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்ரான் கான் நீதிமன்ற உத்தரவுகளை எப்போதும் பின்பற்றுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதால் அவரை காவல் துறையால் கைது செய்ய முடியாது என்று அவரது வழக்கறிஞர் இமாம் வாதிட்டார். ஆனால் இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டை அணுகி வாரண்ட் மீது தற்காலிக தடை பெறலாம் என்று கூறினார்.

இதனையடுத்து இம்ரான் கான் தரப்பில் இஸ்லாமாபாத் உயர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு மீது விசாரணை நடத்திய ஐகோர்ட்டு, மார்ச் 13-ந்தேதி வரை கைது வாரண்டை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டது.

அதேசமயம், மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு இம்ரான் கான் நேரில் ஆஜராவதற்கு 4 வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என இம்ரான் கான் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கையை ஐகோர்ட்டு நிராகரித்தது.

இந்த நிலையில், பரிசு பொருட்கள் வாங்கி, விற்ற வழக்கில் கோர்ட்டில் ஆஜராக இம்ரான் கான் லாகூரில் உள்ள ஜமன் பூங்கா இல்லத்தில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு இன்று புறப்பட்டு சென்றார். அவருடன் பாதுகாப்புக்காக கூடவே வாகனங்களும் சென்றன.

அவரது வருகையை முன்னிட்டு இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் முன்பே பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கூடுதல் செஷன் நீதிபதி ஜாபர் இக்பால் முன் இம்ரான் கான் ஆஜராக சென்றார்.

எனினும், செல்லும் வழியில் இம்ரான் கானின் பாதுகாப்பு வாகனத்தில் ஒன்று திடீரென கவிழ்ந்தது. கடந்த 14-ந்தேதி கோர்ட்டு உத்தரவின்பேரில் இம்ரான் கானை கைது செய்ய இஸ்லாமாபாத்தில் இருந்து போலீசார் லாகூருக்கு சென்றனர்.

எனினும், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், இஸ்லாமாபாத் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது. பி.டி.ஐ. கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டது. இம்ரான் கான் ஒன்பது வழக்குகளில் லாகூர் ஐகோர்ட்டிடம் இருந்து பாதுகாப்பு ஜாமீன் பெற்று உள்ளார்.


Next Story