பாகிஸ்தான் பிரதமரின் கசிந்த உரையாடல் ஆடியோ ரூ.28.43 கோடிக்கு இணையத்தில் ஏலம்


பாகிஸ்தான் பிரதமரின் கசிந்த உரையாடல் ஆடியோ ரூ.28.43 கோடிக்கு இணையத்தில் ஏலம்
x

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கசிந்த உரையாடல் ஆடியோ ரூ.28.43 கோடிக்கு இணையத்தில் ஏலத்திற்கு விடப்பட்டு உள்ளது என எதிர்க்கட்சி அறிவித்து உள்ளது.



லாகூர்,


முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியை சேர்ந்த பவத் சவுத்ரி, ஆளும் கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

அவர், தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள 2 நிமிடம் ஓட கூடிய ஆடியோ பதிவில், பிரதமர் நாட்டை விட தனது குடும்பத்தின் நலனில் அதிக அக்கறையுடன் செயல்படுகிறார் என்பது தெரிகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அதுபற்றி அவர் வெளியிட்ட அந்த வீடியோவில், ஷெபாஸ் ஷெரீப் பேசுவது போன்ற குரல் கேட்கிறது. அதில், இந்தியாவில் இருந்து, மின் உலைக்கான இயந்திர இறக்குமதிக்கு தனது மருமகனான ரஹீல் என்பவருக்கு வேண்டிய வசதிகளை செய்து தரும்படி மரியம் நவாஸ் ஷெரீப் என்னிடம் கேட்டுள்ளார் என்று ஷெபாஸ் ஷெரீப், உயரதிகாரியிடம் கூறுகிறார்.

அதற்கு அந்த அதிகாரி, நாம் இப்படி செய்தோம் என்றால், இந்த விவகாரம் அமைச்சரவைக்கு செல்லும்போது, கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என கூறுவது கேட்கிறது என்று தி டான் பத்திரிகை தெரிவித்து உள்ளது.

அதற்கு பிரதமர், அந்த மருமகன் மரியம் நவாசுக்கு ரொம்ப அன்பானவர். இந்த விவரம் பற்றி மரியமிடம் விரிவாக எடுத்து கூறுங்கள். அதன்பின்னர், மரியமிடன் நான் பேசுகிறேன் என்று ஷெரீப் கூறுகிறார்.

அதற்கு பதிலாக, இது அரசியல் சிக்கலை உருவாக்க கூடும் என்று அந்த நபர் எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் கூறுகிறார். இந்த ஆடியோ கசிவானது பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பவத் சவுத்ரி கூறும்போது, 115 மணிநேரம் ஓட கூடிய இந்த பிரதமரின் உரையாடல் அடங்கிய கசிந்த ஆடியோ பதிவானது ரூ.28.43 கோடிக்கு இணையத்தில் ஏலத்திற்கு விடப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

இதனால், பிரதமர் அலுவலகம் பாதுகாப்புடன் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆடியோ பதிவு கசிவானது, முடிவுகள் அனைத்தும் லண்டனில் எடுக்கப்பட்டு உள்ளன என உறுதிப்படுத்தி உள்ளது.

பிரதமர் அலுவலகத்தின் ஆடியோ பதிவு கசிவு, பாதுகாப்பு அமைப்புகளின் தோல்வியை காட்டுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நீண்ட ஆடியோ பதிவில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் கட்சியின் துணை தலைவரான மரியம் நவாஸ் ஷெரீப், பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப், சட்ட மந்திரி ஆசம் தரார், உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா மற்றும் முன்னாள் சபாநாயகர் அயாஸ் சாதிக் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருக்கு இடையேயான உரையாடல்கள் உள்ளளன.

இவற்றில், முதல் பதிவில், மரியம் நவாஸ் மற்றும் பிரதமர் ஷெபாஸ் இடையேயான உரையாடல் உள்ளது. அதில், கடினம் வாய்ந்த பொருளாதார நடவடிக்கைகளை எடுத்த நாட்டின் நிதி மந்திரி மிப்தா இஸ்மாயில் மீது கட்சிக்குள்ளேயே கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனை பற்றி இருவரும் பேசி கொள்கின்றனர்.

பொதுவெளியில் பேசும்போது, தனது கட்சி அரசில் இருக்கிறதோ, இல்லையோ பெட்ரோல் மற்றும் மின்சார கட்டண உயர்வு முடிவை ஏற்று கொள்ள முடியாது என மரியம் நவாஸ் குறிப்பிட்டார்.

இதுபற்றி குறிப்பிட்ட சவுத்ரி, மரியம் நவாஸ், பொதுவெளியில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு, ஆடியோவில் அவற்றை உயர்த்த அவர் கேட்டு கொள்கிறார் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

நிதி மந்திரி நீக்கம் பற்றி குறிப்பிட்ட சவுத்ரி, மிப்தா இஸ்மாயிலுக்கு பதிலாக இஷாக் தர் என்பவரை மீண்டும் கொண்டு வருவதற்கான வேலையை மரியம் செய்துள்ளார். நீண்ட காலம் சேவை செய்த இஸ்மாயிலை, அவமதிக்கும் அணுகுமுறையோடேயே நடத்தியுள்ளனர் என்றும் சவுத்ரி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.


Next Story