பாகிஸ்தான்: மகளை படிக்க அனுப்பிய விவசாயிக்கு நேர்ந்த கதி...!! கிராமவாசிகளின் அட்டூழியம்


பாகிஸ்தான்:  மகளை படிக்க அனுப்பிய விவசாயிக்கு நேர்ந்த கதி...!! கிராமவாசிகளின் அட்டூழியம்
x

பாகிஸ்தானில் 2022-ம் ஆண்டு கல்வியறிவு விகிதத்தின்படி, ஆண்களின் கல்வியறிவு 70 சதவீதம் என்றளவில் உள்ளது.

சிந்த்,

பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் லர்கானா மாவட்டத்தில் ரதோதிரோ நகரில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் சிறுமி ஜைனப் ஜங்கிஜோ. இவருடைய தந்தை ஆஷாக் ஜங்கிஜோ.

விவசாயியான ஆஷாக், அவருடைய மகளை பள்ளிக்கு படிக்க அனுப்பி வைத்திருக்கிறார். சிறுமி ஜைனப் தன்னுடைய சகோதரர்களை பைக்கில் ஏற்றி கொண்டு அதனை அவரே தினமும் ஓட்டி செல்வது வழக்கம். இது அந்த கிராமவாசிகளுக்கு பிடிக்கவில்லை. இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

ஆஷாக்கிடம் சென்று, இதனை நிறுத்தி கொள்ளும்படி மிரட்டியுள்ளனர். ஆனால், இதனை அவர் கவனத்தில் கொள்ளவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கிராமத்தினர் திட்டம் தீட்டி, ஆஷாக்கின் கோதுமை சேமிப்பு கிடங்கு மீது தீ வைத்து கொளுத்தி விட்டனர். இதில், அவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி லஷாரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்நாட்டில் பெண்களை விட ஆண்கள் அதிகளவில் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். 2022-ம் ஆண்டு கல்வியறிவு விகிதத்தின்படி, ஆண்களின் கல்வியறிவு 70 சதவீதம் என்றளவில் உள்ளது. ஆனால், பெண்களின் கல்வியறிவு 48 சதவீதம் அளவுக்கே உள்ளது.

பொருளாதார நெருக்கடிகள், நீண்ட தொலைவுக்கு பள்ளிகளை தேடி செல்ல வேண்டிய சூழல், கலாசார தடைகளால் சிறுமிகள் கல்வியை தொடர முடியாமல் போகிறது. இளம் வயதில் திருமணம், குழந்தை தொழிலாளர் முறை ஆகியவையும் அவர்களின் நிலைமையை இன்னும் மோசமடைய செய்துள்ளது.


Next Story