உத்தர பிரதேசத்தில் பிற மாநில உணவுகள் குறித்து அறியும் வகையில் உணவு வீதிகள் அமைக்க திட்டம் - யோகி ஆதித்யநாத் தகவல்


உத்தர பிரதேசத்தில் பிற மாநில உணவுகள் குறித்து அறியும் வகையில் உணவு வீதிகள் அமைக்க திட்டம் - யோகி ஆதித்யநாத் தகவல்
x

Image Courtesy : @myogiadityanath twitter

தினத்தந்தி 25 Dec 2022 4:18 PM GMT (Updated: 25 Dec 2022 4:34 PM GMT)

அனைத்து நகரங்களிலும் உணவு வீதிகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக உத்தர பிரதேசத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநில கலாச்சாரத்துறை சார்பில் லக்னோவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

"காசி தமிழ் சங்கத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து பன்னிரெண்டு குழுவினர் காசிக்கு வந்தனர். அதில் ஆசியர்கள், மாணவர்கள், மத தலைவர்கள், கலைஞர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இடம்பெற்றிருந்தனர்.

இந்த பயணத்தின் மூலம் உத்தர பிரதேசம் குறித்தும் வட மாநிலங்கள் குறித்தும் பொதுவாக பரப்பப்பட்டு வரும் தவறான தகவல்களை தமிழ் மக்கள் மாற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது. காசிக்கு வந்தவர்கள் அனைவரும் உத்தர பிரதேச மக்களின் கனிவான விருந்தோம்பலைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

இது போன்ற சங்கங்கள் பழங்காலங்களில் இருந்தே நடந்து வந்திருக்கின்றன. பல்வேறு வகையான உணவு, உடை, மொழி மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டிருப்பதே நமது நாட்டின் மிகப்பெரிய பலமாகும்.

அந்த வகையில் உத்தர பிரதேச மக்கள் பிற மாநிலங்களின் உணவு வகைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், மாநிலம் முழுவதும் அனைத்து நகரங்களிலும் உணவு வீதிகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதில் தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில உணவுகளை மக்கள் ருசிக்க முடியும். உத்தர பிரதேச மக்கள் பிற மாநிலங்களுக்கு பயணம் செய்யும் போது இது அவர்களுக்கு உதவியாக இருக்கும்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story