அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி : இன்று யோகா தின கொண்டாட்டத்தில் பங்கேற்பு


அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி : இன்று யோகா தின கொண்டாட்டத்தில் பங்கேற்பு
x

கோப்புப்படம்

இன்று நியூயார்க்கில் ஐ.நா.சபை தலைமையகத்தில் நடக்கிற யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணமாக புறப்பட்டுச்சென்றார். இரு தரப்பு உறவை இந்தப்பயணம் வளப்படுத்தும் என அவர் கூறி உள்ளார். இன்று அவர் நியூயார்க்கில் ஐ.நா.சபை தலைமையகத்தில் நடக்கிற யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார்.

நியூயார்க் சென்றடைந்தார், பிரதமர்

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின்பேரில் பிரதமர் மோடி முதல்முறையாக அந்த நாட்டுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.

இதற்காக நேற்று காலை சுமார் 7 மணியளவில் அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நியூயார்க் நகருக்கு புறப்பட்டுச்சென்றார். பின்னர் அமெரிக்காவுக்கான அரசு முறை பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் மோடி நேற்றிரவு நியூயார்க் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் பெரும்பணக்காரரும், டெஸ்லா, டுவிட்டர் நிறுவனங்களின் அதிபருமான எலான் மஸ்க்கையும் அவர் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் ஐ.நா. சபை தலைமையகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிற சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தை அவர் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார். யோகா பயிற்சியும் மேற்கொள்கிறார்.

அதைத் தொடர்ந்து அவர் தலைநகர் வாஷிங்டனுக்கு செல்கிறார். அங்கு அவர் ஜனாதிபதி ஜோ பைடனுடன் இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்துகிறார். அமெரிக்க ஜனாதிபதியும், அவரது மனைவியும் பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்து அளிக்கிறார்கள்.

எலான் மஸ்க் உள்ளிட்டவர்களுடன் சந்திப்பு

பிரதமர் மோடி, அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைமைச்செயல் அதிகாரிகளை சந்தித்துப் பேசுகிறார். அவர்களை இந்தியாவில் தொழில் தொடங்கவும், கூடுதல் முதலீடுகள் செய்யவும் அவர் அழைப்பு விடுக்கிறார்.

நோபல் பரிசு பெற்றவர்களான விஞ்ஞானி நீல் டிகிராஸ் டைசன் மற்றும் பொருளாதார நிபுணர் பால் ரோமரையும் அவர் சந்திக்க இருக்கிறார். அமெரிக்க வாழ் இந்தியர்களையும் பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

புறப்படும் முன் அறிக்கை

விமானத்தில் நியூயார்க் நகருக்கு புறப்படுவதற்கு முன்பாக பிரதமர் மோடி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரது அழைப்பின்பேரில் நான் அமெரிக்காவுக்கு செல்கிறேன். இந்த சிறப்பு அழைப்பு, நமது ஜனநாயக நாடுகள் இடையேயான கூட்டின் வீரியத்தையும், உயிர்ப்பையும் பிரதிபலிக்கிறது.

நியூயார்க் நகரில் எனது பயணத்தைத் தொடங்குகிறேன். அங்கு நான் ஐ.நா. சபை தலைமையகத்தில் ஐ.நா. சபையின் தலைமை மற்றும் சர்வதேச சமூகத்தின் உறுப்பு நாடுகளுடன் நான் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடுகிறேன். எந்த இடத்தில் 2014-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் சர்வதேச யோகாதினத்தை அங்கீகரிப்பதில் இந்தியாவின் முன்மொழிதலுக்கு ஆதரவு குவிந்ததோ அதே இடத்தில், இந்த சிறப்பு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள காத்திருக்கிறேன்.

உறவை வளப்படுத்த வாய்ப்பு

அதன்பின்னர் அங்கிருந்து தலைநகர் வாஷிங்டனுக்கு செல்கிறேன். 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான் அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டதில் இருந்து பல முறை ஜனாதிபதி ஜோ பைடனைச் சந்திக்கிற வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன். இந்தப்பயணமானது, நமது உறவின் ஆழத்தையும், பன்முகத்தன்மையையும் வளப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

புதிய பரிமாணங்கள்

இந்தியா, அமெரிக்கா உறவு பன்முகம் கொண்டது. இது பல்வேறு துறைகளில் ஆழமானது. இந்தியப்பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மிகப்பெரிய வர்த்தகக்கூட்டாளி அமெரிக்கா ஆகும். நாம் அறிவியல், தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம், ராணுவம், பாதுகாப்புத்தளங்களில் நெருக்கமாக இணைந்து செயல்படுகிறோம். சிக்கலான, வளர்ந்து வருகிற தொழில்நுட்பங்களின் முயற்சி, ராணுவ தொழில் ஒத்துழைப்பு, வான்வெளி, தொலைதொடர்பு, குவாண்டம், செயற்கை நுண்ணறிவு, உயிரிதொழில்நுட்பம் ஆகிய துறைகளில் புதிய பரிமாணங்களையும், பரந்த ஒத்துழைப்பினையும் ஏற்படுத்தி உள்ளோம்.

நாடாளுமன்றத்தில் பேச்சு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனும், மூத்த அமெரிக்க தலைவர்களுடனும் நான் நடத்துகிற பேச்சுவார்த்தை, நமது இரு தரப்பு ஒத்துழைப்பையும், ஜி-20, குவாட், இந்திய பசிபிக் பொருளாதார கட்டமைப்பு ஆகிய பல தரப்பு மன்றங்களில் ஒருங்கிணைக்கவும், ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தித்தரும்.

அமெரிக்க ஜனாதிபதி பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோருடனும், எண்ணற்ற பிரமுகர்களுடனும் விருந்தில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்திய, அமெரிக்க உறவில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு தரப்பும் வலுவான ஆதரவை எப்போதும் தந்து வந்துள்ளன. எனது அமெரிக்க பயணத்தின்போது, நாடாளுமன்ற தலைமையின் அழைப்பின்பேரில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நான் பேசுகிறேன்.

நம்பிக்கை வளர்ப்பு

நம் நாடுகள் இடையே நம்பிக்கையை வளர்ப்பதில் மக்களுக்கு இடையேயான வலுவான தொடர்பு முக்கிய பங்கு வகிக்கிறது. நமது சமூகங்களை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்துகிற துடிப்பான இந்திய, அமெரிக்க சமூகத்தினரைச் சந்திக்க ஆவலுடன் உள்ளேன். நமது வர்த்தகம், முதலீடு உறவுகளை மேலும் உயர்த்துவதற்கும், நெகிழ்ச்சித்தன்மையுடன் கூடிய உலகளாவிய வினியோகச்சங்கிலியை கட்டமைக்கவும் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைமைச்செயல் அதிகாரிகளுடன் விவாதிக்கிற வாய்ப்பினையும் நான் பெற்றுள்ளேன்.

எனது அமெரிக்கப்பயணம், நமது பகிரப்பட்ட ஜனநாயக மதிப்பீடுகள், பன்முகத்தன்மை, சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையிலான நமது உறவை வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். பகிரப்பட்ட உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் நாங்கள் ஒன்றுபட்டு வலுவுடன் நிற்கிறோம்.

எகிப்து பயணம்

எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல்சிசியின் அழைப்பின்பேரில் நான் வாஷிங்டனில் இருந்து கெய்ரோ (எகிப்து தலைநகர்) செல்கிறேன். நெருக்கமான நட்பு நாடான எகிப்துவுக்கு முதல் முறையாக அரசு முறைப்பயணம் மேற்கொள்வதில் நான் பரவசமாக உள்ளேன்.

இந்த ஆண்டு குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் நாம் எகிப்து அதிபர் சிசியை தலைமை விருந்தினராக வரவேற்று மகிழ்ந்தோம். சில மாத இடைவெளியில் நடைபெறுகிற இந்த பயணம், எகிப்துவுடன் வேகமாக வளர்ந்து வரும் நம் கூட்டின் பிரதிபலிப்பு ஆகும். இது அதிபர் சிசியின் இந்திய பயணத்தின்போது பாதுகாப்பு கூட்டுறவாக உயர்த்தப்பட்டது.

அதிபர் சிசியுடனும், எகிப்து அரசின் மூத்த உறுப்பினர்களுடனும் நமது நாகரிக, பன்முக கூட்டினை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதற்கு விவாதிக்க எதிர்நோக்கி காத்திருக்கிறேன். எகிப்திலும் துடிப்பான புலம் பெயர்ந்த இந்தியர்களை சந்திக்கிற வாய்ப்பினை நான் பெற்றிருக்கிறேன் என்று அவர் கூறி உள்ளார்.

சிறப்பு பேட்டி

தனது அமெரிக்க பயணத்தையொட்டி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து வெளிவருகிற 'வால்ஸ்டிரீட் ஜர்னல்' பத்திரிகைக்கு பிரதமர் மோடி சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய முக்கிய விஷயங்கள் இவைதான்:-

* சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் நான்தான். எனவே தான் எனது சிந்தனை செயல்முறை, எனது நடத்தை, நான் சொல்வதும், செய்வதும், எனது நாட்டின் பண்புகளாலும், மரபுகளாலும் ஈர்க்கப்பட்டு தாக்கம் செலுத்துகிறது. அதிலிருந்து நான் எனது வலிமையைப் பெறுகிறேன்.

* எனது நாட்டை நான் உலகில் முன்னிலைப்படுத்துகிறேன்.

இந்தியாவுக்கு பங்களிப்பு

* உலக அரங்கில் இந்தியாவுக்கு மிக உயர்ந்த, ஆழமான, பரந்த பங்களிப்பு உள்ளது.

* அமெரிக்கா, இந்தியா தலைவர்கள் இடையே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நம்பிக்கை நிலவுகிறது.

* இரு தரப்பு கூட்டுறவின் முக்கிய தூணாக ராணுவ ஒத்துழைப்பு உள்ளது. இது இரு தரப்பு வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி ஆகியவற்றுக்கு விரிவாக்கம் செய்கிறது.

* சீனா உடனான இயல்பான உறவில், அமைதியும், சமாதானமும் எல்லைப்பகுதிகளில் நிலவுவது முக்கியம். நமது இறையாண்மையையும், பிரதேச ஒருமைப்பாடும் மதிக்கப்பட வேண்டும், கருத்து வேறுபாடுகள், பிரச்சினைகள் ஆகியவற்றில் சட்டத்திற்குட்பட்டு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும்.

உக்ரைனில் நடுநிலையா?

* உக்ரைன் போரில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. இந்தியா, இதில் சமாதானத்தின் பக்கம்தான் இருக்கிறது.

* எல்லா நாடுகளும், சர்வதேச சட்டத்தையும், நாடுகளின் இறையாண்மையையும் மதிக்க வேண்டும். பிரச்சினைகள், ராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டுமே தவிர போரினால் அல்ல.

* ஐ.நா.சபை போன்ற உலகளாவிய நிறுவனங்கள் மாற வேண்டும் என்று அந்தப் பேட்டியில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.


Next Story