பிரேசில் அதிபருடன் முதன்முறையாக உக்ரைன் அதிபர் சந்திப்பு; இருதரப்பு உறவுகள் பற்றி ஆலோசனை


பிரேசில் அதிபருடன் முதன்முறையாக உக்ரைன் அதிபர் சந்திப்பு; இருதரப்பு உறவுகள் பற்றி ஆலோசனை
x
தினத்தந்தி 21 Sep 2023 1:55 AM GMT (Updated: 21 Sep 2023 8:43 AM GMT)

பிரேசில் அதிபருடன் முதன்முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து இருதரப்பு உறவுகளை பற்றி பேசினார்.

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த 78-வது ஐ.நா. பொது சபை கூட்டத்தொடரில் உறுப்பு நாடுகள் கலந்து கொண்டன. இந்த கூட்டத்தொடரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, உக்ரைனில் ரஷியா இனப்படுகொலையில் ஈடுபடுகிறது என குற்றச்சாட்டு கூறினார்.

ரஷியா பல விசயங்களை ஆயுதங்களாக மாற்றி, தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த விசயங்கள் எங்களுடைய நாட்டுக்கு எதிராக மட்டுமின்றி, உங்களுக்கும் (ஐ.நா. பொது சபை உறுப்பு நாடுகள்) கூட எதிராக பயன்படுத்தப்படுகிறது என கூறினார். பயங்கரவாதிகள் அணு ஆயுதங்களை வைத்திருக்க எந்த உரிமையும் இல்லை என்றும் அவர் ரஷியாவை சாடினார்.

இந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக, பிரேசில் நாட்டு அதிபரான லூயிஸ் இனேசியோ லூலா டா சில்வாவை, ஜெலன்ஸ்கி நேரில் சந்தித்து பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான அமைதியை கட்டியெழுப்புவதற்கான பாதையை வகுப்பதின் முக்கியத்துவம் மற்றும் பேச்சுவார்த்தையை மேம்படுத்துவது ஆகியவை பற்றி இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.

இரு நாடுகளின் தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சந்தித்து கொள்வது இது முதன்முறை என்று சி.என்.என். செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. லூலாவுடனான இந்த சந்திப்பு நேர்மையாகவும் மற்றும் பயனுடைய ஒன்றாகவும் இருந்தது என ஜெலன்ஸ்கி கூறினார்.

இந்த சந்திப்பை அடுத்து, இருதரப்பு உறவுகள் மற்றும் அமைதி முயற்சிகளில் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் பணியாற்றும்படி எங்களுடைய தூதரக குழுவினரை அறிவுறுத்தி உள்ளோம் என்றும் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.


Next Story