எகிப்து ஓட்டலில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு


எகிப்து ஓட்டலில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு
x

எகிப்து ஓட்டலில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் திரை பாடல்களை பாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கெய்ரோ,

பிரதமர் மோடியின் 4 நாட்கள் அமெரிக்க பயணம் நிறைவடைந்ததும், அவர் எகிப்துக்கு இன்று புறப்பட்டு சென்றார். கெய்ரோ விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை எகிப்து பிரதமர் முஸ்தபா மத்தவுலி நேரில் சென்று வரவேற்றார்.

எகிப்து சென்றுள்ள பிரதமர் மோடி நாளை அந்நாட்டு அதிபர் அப்துல் பஹத் எல் சிசியை சந்திக்கிறார். கடந்த ஜனவரியில் குடியரசு தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எகிப்து அதிபர் அப்துல் பஹத் எல் சிசி அப்போது, எகிப்துக்கு வரும்படி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததன் பேரில் பிரதமரின் இந்த பயணம் அமைந்து உள்ளது.

பிரதமர் மோடி எகிப்து நாட்டிற்கு சென்றடைந்ததும் தலைநகர் கெய்ரோ நகரில் உள்ள ஓட்டலில் அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வந்தே மாதரம் என்றும், மோடி மோடி என்றும் கோஷங்களை எழுப்பினர்.

இந்திய சமூக மக்கள் பலரும் பிரதமர் மோடியை வரவேற்க திரண்டிருந்தனர். அதில், சிறுவர், சிறுமிகளும் இருந்தனர். பலர் இந்திய திரைப்பட பாடல்களை பாடியும், கலாசார நிகழ்ச்சிகளை வழங்கியும் அவரை வரவேற்றனர். அவர்களை பிரதமர் மோடி வாழ்த்தியதுடன், அவர்களுடன் சிறிது நேரம் உரையாடினார்.

இந்த பயணத்தில் பிரதமர் மோடி மற்றும் எகிப்து பிரதமர் முஸ்தபா மத்தவுலி இடையே முதன்முறையாக வட்டமேசை மாநாடு ஒன்றும் நடைபெற உள்ளது. இதனை எகிப்துக்கான இந்திய தூதர் அஜித் குப்தே உறுதிப்படுத்தினார்.

அவர் இந்த பயணத்தின்போது, கெய்ரோ நகரில் உள்ள அல்-ஹகீம் மசூதியில் அரை மணிநேரம் செலவிட உள்ளார். 16-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த மசூதியானது தாவூதி போரா சமூகத்தினரின் முக்கியத்துவம் வாய்ந்த கலாசார மையம் ஆகும்.


Next Story