ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே இறுதி சடங்கில் பிரதமர் மோடி பங்கேற்பு


ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே இறுதி சடங்கில் பிரதமர் மோடி பங்கேற்பு
x

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே இறுதி சடங்கில் பிரதமர் மோடி பங்கேற்பார் என ஜப்பானிய ஊடகம் இன்று தெரிவித்து உள்ளது.



டோக்கியோ,



ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷின்ஜோ அபே (வயது 67). 2006-07, 2012-20 கால கட்டத்தில் அங்கு பிரதமர் பதவி வகித்தவர் மற்றும் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவராகவும் இருந்தவர் அவர்.

கடந்த 2020-ம் ஆண்டு, அவர் உடல்நல பிரச்சினையை காரணம் காட்டி பதவி விலகினார். ஆனாலும் கட்சி செயல்பாடுகளில் கலந்து கொண்டு வந்தார். இந்த நிலையில், ஜப்பான் நாடாளுமன்ற மேல்சபைக்கான தேர்தல் பிரசார கூட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் அவர் பங்கேற்றார்.

இதற்காக, நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர ரெயில் நிலையம் முன்பு கடந்த ஜூலை 8-ந்தேதி காலை 11.30 மணிக்கு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஷின்ஜோ அபே கலந்து கொண்டு பேசினார். அவர் பேசத்தொடங்கிய சில நிமிடங்களில், அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த நபர் அவரை துப்பாக்கியால் 2 முறை சுட, அவர் கழுத்தில் குண்டுபாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவர் உடனடியாக அவசர சிகிச்சைக்காக நாரா மருத்துவ பல்கலைக்கழக ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரில் எடுத்து செல்லப்பட்டார்.

இருப்பினும் அவரை காப்பாற்ற 20 பேரை கொண்ட டாக்டர்கள் குழு பல மணி நேரம் போராடியும், ஷின்ஜோ அபேயை காப்பாற்ற முடியவில்லை. உள்ளூர் நேரப்படி மாலை 5.03 மணிக்கு அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். ஜப்பானில் சுட்டுக்கொல்லப்பட்ட 6-வது முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

ஷின்ஜோ அபேயை சுட்ட நபர், டெட்சுயா யாமகாமி (வயது 41), கடற்படை வீரர் என தெரிய வந்துள்ளது. அவர் உடனே சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேவின் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் தலைநகர் டோக்கியோவில் உள்ள கித்தனோமரு நேசனல் கார்டனில் நிப்பான் புத்தோகன் பகுதியில் வருகிற செப்டம்பர் 27-ந்தேதி அரசு மரியாதையுடன் நடத்த ஜப்பானிய அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது.

இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கலந்து கொள்வார் என கியோடோ நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன்பின்னர் ஜப்பானின் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்து அவர் பேசுவார் என்றும் தெரிவித்து உள்ளது.

ஆசிய பகுதியில் இந்தியாவின் முக்கிய கூட்டணி நாடாக ஜப்பான் உள்ளது. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய 4 நாடுகள் குவாட் என்ற அமைப்பில் ஒன்றிணைந்து, விரிவான ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே இருவரும் தங்களது பதவி காலத்தின்போதும், அபேவின் பதவி காலம் நிறைவடைந்த பின்னரும் இருவரும் நட்புறவுடன் இருந்தனர்.


Next Story