உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்க தயார் - டென்மார்க் அறிவிப்பு


உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்க தயார் - டென்மார்க் அறிவிப்பு
x

உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்க தயாராக இருப்பதாக டென்மார்க் ராணுவ மந்திரி கூறியுள்ளார்.

கோபன்ஹேகன்,

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த போர் தொடர்ந்து வரும் நிலையில், இரு தரப்பிலும் அதிக அளவிலான உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த போரில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் போர் விமானங்களை வழங்க தயக்கம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க் உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் ராணுவ மந்திரி டிரோல்ஸ் லண்ட் பால்சன் கூறுகையில், "உக்ரைன்-ரஷியா போரில் ஒரு கட்டத்தில் போர் விமானங்களின் பங்களிப்பை கவனிக்க வேண்டும் என்பதை மறுக்க முடியாது. எனவே உக்ரைனின் தற்காப்புக்கு உதவ எப்-16 ரக போர் விமானங்களை வழங்க டென்மார்க் அரசு தயாராக இருக்கிறது" என்று தெரிவித்தார்.



Next Story