அமெரிக்காவில் இடைத்தேர்தலை முன்னிட்டு கருக்கலைப்பு உரிமைக்கு ஆதரவாக வலுக்கும் போராட்டம்


அமெரிக்காவில் இடைத்தேர்தலை முன்னிட்டு கருக்கலைப்பு உரிமைக்கு ஆதரவாக வலுக்கும் போராட்டம்
x

பொதுமக்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வாக்குகளை அளிக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை மற்றும் அரசியலமைப்பு உரிமை என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு 1973-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதேபோல் 1992- ம் ஆண்டு நடந்த வழக்கில் 22 முதல் 24 வார கால கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டப்பூர்வமாக கலைத்துக்கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு பல்வேறு மாகாணங்களில் சட்டவடிவில் உள்ளது.

இந்நிலையில், 15 வாரத்திற்கு பிந்தைய கருவை கலைப்பதை தடை விதித்து மிசிசிப்பி மாகாண அரசு கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் வழக்குத்தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில், கருக்கலைப்பு செய்வதற்கான பெண்களின் தனிப்பட்ட சட்ட உரிமையை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்தது. இதன் மூலம் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு சட்ட உரிமை நீக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தீர்ப்பு குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "கருக்கலைப்பு சட்டம் தொடர்பான இந்த தீர்ப்பு கோர்ட்டு மற்றும் நாட்டிற்கு சோகமான நாள். உரிமையை சுப்ரீம் கோர்ட்டு பறித்துள்ளது" என்றார்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை தொடர்ந்து அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 13 மாகாணங்கள் கருக்கலைப்பு தடை சட்டத்தை அமல்படுத்தியுள்ளதாகவும், 25-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் கருக்கலைப்புக்கு தடை விதித்தல் அல்லது கருக்கலைப்புக்கான விதிகளை கடுமையாக்கும் சட்டத்தை அமல்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூழலில் அமெரிக்காவில் அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிவு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குடியரசு மற்றும் ஜனநாகய கட்சிகளுக்கு இடையிலான சமபங்கு ஆற்றலை தீர்மானிக்கக் கூடியது ஆகும். எனவே தற்போது அமெரிக்காவில் பெண்கள் மீண்டும் கருக்கலைப்பு உரிமைக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தேர்தலில் பொதுமக்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வாக்குகளை அளிக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அதே நேரம் இந்த போராட்டம் ஆண்களுக்கு எதிரானது அல்ல என்றும், பெண்களின் உரிமை தொடர்பானது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


Next Story